விஜய்க்காக களமிறங்கிய டிகே சிவக்குமார்? தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கே இருக்காங்க தெரியுமா?
பெங்களூர்: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்தள்ளனர். மேலும் குதிரை பேரத்துக்கு பயந்து அவர்கள் வெளிமாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த எம்எல்ஏக்கள் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் உள்ள ரெசார்ட்டில் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சம்பவம் பற்றி டிகே சிவக்குமார் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற விஜய்யின் தவெகவிற்கு ((Vijay tvk news) மெஜாரிட்டி இல்லை. மெஜாரிட்டிக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை. இதனால் விஜய், காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கோரினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. காங்கிரஸ் கட்சியில் மொத்தம் 5 பேர் வெற்றி பெற்றனர்.
விஜய் ஆதரவு கேட்டவுடன் காங்கிரஸ் மேலிடம் திமுக கூட்டணியை முறித்தது. விஜய்யை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்டு வழங்கிய ஆதரவு கடிதம் விஜய்யிடம் வழங்கப்பட்டது.

அதன்படி மயிலாடுதுறையில் வென்ற ஜமால் முகமது யூனுஸ், மேலூரில் வென்ற விஸ்நாதன், குளச்சலில் ஜெயித்த தாரகை கத்பர்ட், விளவங்கோட்டில் வாகை சூடிய பிரவீன், கிள்ளியூரில் ஜெயித்த ராஜேஷ் குமார் என 5 எம்எல்ஏக்களும் தங்களின் ஆதரவை விஜய் முதல்வராக வழங்கினர். இதனால் திமுக கடும் கோபமடைந்தது. தங்களின் கூட்டணியில் வென்று தவெகவிற்கு ஆதரவு அளித்ததால் கடுமையாக விமர்சனம் செய்தது.
இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கலாம் என்று நினைத்த மேலிடம் அவர்களை வெளிமாநிலத்துக்கு அனுப்பி வைத்தது. நேற்று மாலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் பறந்தனர். ஹைதராபாத் தெலுங்கானாவின் தலைநகராகும். அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இதனால் அங்கு ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைககப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நாளில் இந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தமிழ்நாட்டுக்கு வந்து விஜய்க்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே தான் இன்று காலை முதல் இன்னொரு தகவல் பரவி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், எம்எல்ஏக்களை பாதுகாப்பதில் கைதேர்ந்த கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் அவர்களை கட்டுப்பாட்டில் எடுத்து பாதுகாப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
இதனால் விஜய்யை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் டிகே சிவக்குமாரை களமிறக்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக டிகே சிவக்குமார் இன்று விளக்கம் அளித்தார்.
பெங்களூர் சதாசிவநகரில் உள்ள வீட்டில் டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ''தமிழ்நாட்ட சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஈகள் டன் ரெசார்ட்டிற்கு(குஜராத் உள்பட பிற மாநில எம்எல்ஏக்களை டிகே சிவக்குமார் பாதுகாத்த இடம்) வந்துள்ளார்களா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு டிகே சிவக்குமார், ''எம்எல்ஏக்கள் யாரும் ஈகல்டன் ரெசார்ட்டுக்கு வரவில்லை. இதுபற்றி எனக்கு பிற தகவல்கள் வரவில்லை. ஏதாவது தகவல் வந்தால் சொல்கிறேன். மேலும் நீங்கள் குறிப்பிடும் ரெசார்ட் புனரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் ஹைதராபாத் சென்றுள்ளதாக சில செய்திகள் வருகின்றன.
சில செய்திகளில் பெங்களூருவுக்கு வந்ததாக வருகிறது. இவை அனைத்தும் செய்திகள் மூலம் தான் தெரிந்து கொண்டேன். கட்சி மேலிடம் சொல்வதன் அடிப்படையில் தான் நான் செயல்படுவேன். தற்போது வரை கட்சி மேலிடத்திடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை.
தேர்தல் பிரசாரத்துக்கா நான் தமிழ்நாடு சென்றேன். கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடவும் சென்றேன். அதன்பிறகு தமிழ்நாடு விவகாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றார். இதன்மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றும், பெங்களூர் வரவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications