சாதி அரசியல்.. சித்தராமையாவுக்கு வந்த புதிய சிக்கல்.. ஜெகதீஷ் ஷெட்டரை துணை முதல்வராக்க பரபர கடிதம்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது பாஜகவில் சீட் மறுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரால் முதல்வர் சித்தராமையாவுக்கு புதிய பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டி ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என வீரசைவ லிங்காயத் சார்பில் பரபரப்பான கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர். பாஜகவின் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் இவர் தார்வார் மாவட்டம் உப்பள்ளி-தார்வார் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவில் இவருக்கு சீட் மறுக்கப்பட்டது.

இந்த தொகுதியில் அவர் 6 முறை வெற்றி பெற்று ஒரு முறை முதல்வராகவும் பொறுப்பு வகித்தாலும் கூட அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார். பாஜக வேட்பாளர் மகேஷ் தென்கினகாய் 95,064 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ஜெகதீஷ் ஷெட்டர் 60775 ஓட்டுகள் பெற்று சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். உப்பள்ளி-தார்வார் சென்ட்ரல் தொகுதியில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகளின் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளதே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இருப்பினும் கூட ஜெகதீஷ் ஷெட்டரின் வருகை என்பது காங்கிரஸ் கட்சிக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அவர் வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். இந்த சமுதாயத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவுக்கு தான் ஓட்டளிக்கின்றனர். இருப்பினும் கூட ஜெகதீஷ் ஷெட்டர் வருகையால் அவரது ஆதரவாளர்கள் மூலம் காங்கிரஸ் ஓரளவுக்கு வாக்குகளை அறுவடை செய்தது.
இந்நிலையில் தான் தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட அவரது அரசியல் அனுபவம் மற்றும் வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷியை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தார்வார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜெகதீஷ் ஷெட்டர் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக அகில பாரத வீரசைவ மகாசபா சார்பில் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா தலைவர் மஞ்சுநாத் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் வைத்து ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். அப்படி பதவி வழங்கினால் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் வெல்ல வாய்ப்புள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வீரசைவ சமுதாய தலைவரான ஜெகதீஷ் ஷெட்டரை புறக்கணித்தது. இதனால் பாஜக தோல்வியடைந்தது. இதனால் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுவாக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உரிய பிரதிநிதித்துவம் வழங்குவது இல்லை எனவும், பாஜக தான் எடியூரப்பா, பசவராஜ் பொம்மையை முதல்வராக்கி உள்ளன. இதனால் லிங்காயத் மக்களின் ஓட்டுகளை கவரும் வகையில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சில வாரங்களாக புகைய தொடங்கி உள்ள நிலையில் தற்போது முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல மூத்த தலைவர்கள் தங்களுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ள டிகே சிவக்குமார் மட்டுமே துணை முதல்வராக உள்ளார். மற்றவர்களுக்கு துணை முதல்வர் பதவி என்பது வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் ஜெகதீஷ் ஷெட்டருக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கடிதம் எழுதப்பட்டு இருப்பது சித்தராமையாவுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications