ஐபிஎல் போட்டியை பார்க்க.. எம்பி, எம்எல்ஏக்களுக்கு இலவச டிக்கெட்! கர்நாடக துணை முதல்வர் கொடுத்த ஆஃபர்
பெங்களூர்: ஐபிஎல் போட்டி சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. சிஎஸ்கே தோற்றதால், நம்மூர் ரசிகர்கள் அப்செட்டாக இருந்தாலும், கடந்த முறை கப் அடித்த ஆர்சிபிக்கு, கர்நாடக மக்கள் பயங்கர வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில், பெங்களூரில் நடக்கும் ஐபிஎல் மேட்சுக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு இலவச டிக்கெட்களை வழங்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார்.
எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு தலா 3 டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று, டி.கே.சிவகுமார் தெரிவித்திருக்கிறார்.

இலவச டிக்கெட்கள் வேண்டும்
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயானந்த் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 'முக்கிய பிரமுகர்கள்' (VIPs) என்றும், அவர்கள் வரிசையில் நிற்க வேண்டியதில்லை என்றும், எனவே ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் குறைந்தது 5 ஐபிஎல் டிக்கெட்டுகள் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
சிவகுமார் சொன்ன மேட்டர்
பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகுமார், இந்த ஏற்பாடு குறித்து விளக்கமளித்தார். “நான் ஆர்.சி.பி. அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.) மற்றும் தொடர்புடைய அனைவரிடமும் பேசினேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர். சபாநாயகர் உதய் காதருடனும் இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. ஆர்.சி.பி.யின் ஐபிஎல் போட்டிகளுக்கான மூன்று டிக்கெட்டுகளை எங்கள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்கு வழங்க சம்மதித்தனர்” என்றார்.
சர்வதேச போட்டிக்கான டிக்கெட்
சர்வதேசப் போட்டிகளிலும் இப்படி டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு.. “சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரை, கே.எஸ்.சி.ஏ. இரண்டு டிக்கெட்டுகளை வழங்க முடியும். அவற்றை எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். அவை வாங்க நாங்கள் உதவுவோம்,” என்றும் சிவகுமார் தெரிவித்தார்.
பாஜக எதிர்ப்பு
இதற்கிடையில், கர்நாடக பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, எம்.எல்.ஏ.க்களுக்கு ஐபிஎல் டிக்கெட்டுகளை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சிறப்புச் சலுகைகளைக் கோரக்கூடாது என்று வலியுறுத்தினார்.
சாமானிய மக்கள்
“சட்டமன்ற உறுப்பினர்களான நாங்கள் சாதாரண மக்களை விடப் பெரியவர்கள் அல்லது வேறுபட்டவர்கள் அல்ல. சிறப்புச் சலுகைகளைக் கேட்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஐபிஎல் டிக்கெட்டுகளைக் கோருவது என்ற யோசனைக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்,” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அத்துடன், கடந்த ஆண்டு சின்னசாமி ஸ்டேடியம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான சம்பவம் குறித்து மாநில அரசை அவர் கடுமையாக விமர்சித்தார். ஆர்.சி.பி. அணி முதல் ஐபிஎல் பட்டம் வென்ற மறுநாளே நடந்த இத்துயர நிகழ்வு, அரசின் மனிதாபிமானமற்ற, பொறுப்பற்ற, கவனக்குறைவான மனப்பான்மையால் ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications