கையில் 500 ரூபாய் கட்டு! இந்திரா கேன்டீன் ஊழியருக்கு வழங்கிய டிகே சிவக்குமார்! பெங்களூரில் வியப்பு
பெங்களூர்: பெங்களூரில் இந்திரா உணவக ஆய்வின்போது உணவு சாப்பிட்டுவிட்டு துணை முதல்வர் டிகே சிவக்குமார் 500 ரூபாய் கட்டை எடுத்து கட்டணமாக ஊழியரிடம் வழங்கியதை பார்த்து பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் வியந்தனர்.
தமிழ்நாட்டில் அம்மா உணவகம் செயல்படுவது போல் கர்நாடகாவில் இந்திரா கேன்டீன் இயங்கி வருகிறது. பெங்களூரில் மட்டும் 100க்கும் அதிகமான இந்திரா கேன்டீன் உள்ள நிலையில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் என்பது முந்தைய கர்நாடகா அரசின் கனவு திட்டமாகும். மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் குறைந்த விலையில் 3 வேளையும் சாப்பிடும் வகையில் இந்த திட்டத்தை முதல்வர் சித்தராமையா கடந்த 2017 ல் தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக இந்த கேன்டீனுக்கு இந்திரா கேன்டீன் என பெயரிடப்பட்டது. இங்கு காலையில் டிபன் ரூ.5க்கும், மதியம் மற்றும் இரவில் உணவுகள் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்திரா கேன்டீனில் இட்லி, சாம்பார் சாதம், புலாவ், தக்காளி சாதம், ராகி முட்டை உள்பட பல உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கேன்டீனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில் தான் முந்தைய பாஜக ஆட்சியில் இந்திரா கேன்டீன் செயல்பாடு சற்று முடங்கியது. நிதி பற்றாக்குறையால் இந்திரா கேன்டீன் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் தற்போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இந்திரா கேன்டீனுக்கு புத்துயிர் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கிடையே தான் நேற்று துணை முதல்வரும், பெங்களூர் நகர பொறுப்பு அமைச்சருமான டிகே சிவக்குமார் ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் தாசரஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே உள்ள இந்திரா கேன்டீனுக்கு சென்று வாடிக்கையாளர்களிடம் குறைகளை கேட்டார்.
மேலும் எந்தெந்த வகையான உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்த ஊழியர்களிடம் கேட்டார். அதோடு உப்பிட்டு மற்றும் கேசரிபாத் சாப்பிட்டார். இதையடுத்து அவர் இந்திரா கேன்டீன் ஊழியரிடம் பணம் வழங்கினார். அவர் ரூ.10க்கு சாப்பிட்டு இருந்தார். இந்த பணத்தை வழங்க டிகே சிவக்குமார் தான் வைத்திருந்த 500 ரூபாய் கட்டை கையில் எடுத்தார். அதில் இருந்து ரூ.500-யை எடுத்து ஊழியரிடம் வழங்கினார்.
இந்த வேளையில் டிகே சிவக்குமார் கையில் இருந்த ரூ.500 கட்டை பார்த்து இந்திரா கேன்டீன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வியந்தனர். இந்நிலையில் தான் டிகே சிவக்குமார் 500 ரூபாய் கட்டை எடுத்து ஊழியரிடம் வழங்கியது தொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. டிகே சிவக்குமார் பெங்களூர் ஆய்வின்போது கையில் ரூ.500 கட்டுடன் சுற்றுவது ஒன்றும் புதிது அல்ல.
இன்னும் சொல்லப்போனால் கர்நாடகாவில் தற்போது இருக்கும் எம்எல்ஏக்களின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டிகே சிவக்குமார் தான் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2018ல் டிகே சிவக்குமாரின் சொத்து மதிப்பு ரூ.840 கோடியாக இருந்தது. தற்போது சொத்து மதிப்பு தற்போது ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக தெரிவித்து இருந்தார். அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.595 கோடி வரை உயர்ந்துள்ளதாகவும், அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ.1,214.93 கோடியாக இருக்கிறது என வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டிகே சிவக்குமாரின் மனைவி, மகள் மற்றும் மகனின் சொத்துகளை சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ.1,415 கோடி மதிப்பு எனவும் அவர் தெரிவித்து இருந்தார். தற்போது துணை முதல்வராக இருக்கும் டிகே சிவக்குமார் தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது. இதில் சித்தராமையாவுக்கு அதிர்ஷ்டம் அடித்த நிலையில் டிகே சிவக்குமார் துணை முதல்வராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications