மனைவியை விட ரூ.100 கோடி குறைவு.. கர்நாடகா மாஜி முதல்வர் எச்டி குமாரசாமியின் சொத்து மதிப்பு இதுதான்
பெங்களூர்: ஜேடிஎஸ் கட்சியின் தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி வரும் லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் குமாரசாமி மற்றும் அவரது மனைவிக்கு மொத்தம் ரூ.217.21 கோடி சொத்து உள்ளதும், மனைவியை விட குமாரசாமியின் சொத்து மதிப்பு பலமடங்கு குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 28 தொகுதிகள் உள்ள நிலையில் வரும் 26ம் தேதி முதற்கட்டமாகவும், மே 7 ம் தேதி இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறார். பாஜக, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் (முன்னாள் பிரதமர் தேவேகவுடா) ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் மண்டியா தொகுதியில் குமாரசாமி போட்டியிடுகிறார். இவர் தற்போது சென்னப்பட்டணா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள நிலையில் லோக்சபா தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
மண்டியாவில் ஜேடிஎஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த தொகுதியில் ஜேடிஎஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த முறை சுயேச்சையாக களமிறங்கிய மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவி சுமலதாவிடம் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி தோல்வியடந்தார். சுமலதா பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தார். அவர் களமிறங்குவார் என கூறப்பட்ட நிலையில் மண்டியா ஜேடிஎஸ்க்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சுமலதாவும் தேர்தலில் போட்டியிடவில்லை. குமாரசாமிக்கு அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் மண்டியா தொகுதியில் போட்டியிட குமாரசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்து விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி முன்னாள் முதல்வரான குமாரசாமியை விட அவரது மனைவி அனிதாவுக்கு பலமடங்கு சொத்து உள்ளது. அதாவது குமாரசாமியின் பெயரில் மொத்தம் ரூ.54.65 கோடியும், குடும்ப சொத்தாக ரூ.8.17 கோடியும் இருக்கிறது.
ஆனாலும் குமாரசாமியிடம் கார் இல்லை. இருப்பினும் ரூ.12.55 லட்சம் மதிப்பிலான ஒரு டிராக்டர் வைத்துள்ளார். ரூ.47.06 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.2.60 லட்சம் மதிப்பிலான வைரம் வைத்துள்ளார். ரூ.37.48 கோடி மதிப்பிலான விவசாய நிலம், பெங்களூர் ஜேபி நகர் 3வது ஸ்பேஸில் ரூ.6.64 கோடி மதிப்பிலான பங்களா உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரசாமியின் மனைவியும், முன்னாள் எம்எல்ஏவுமான அனிதாவிடம் ரூ.11. 15 லட்சம் மதிப்பிலான கார் உள்ளது. ரூ.2.41 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.33.09 லட்சம் மதிப்பிலான வைரம் உள்ளது. அனிதாவிடம் ரூ.28.38 கோடி மதிப்பிலான விவசாய நிலம், ரூ.35.69 கோடி மதிப்பிலான வணிக கட்டடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிற முதலீடுகள் உள்பட அனிதா குமாரசாமியிடம் மொத்தம் ரூ.154.39 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இது குமாரசாமியை விட சுமார் ரூ.100 கோடிக்கு அதிகமாகும்.
இதன்மூலம் குமாரசாமி மற்றும் அவரது மனைவி அனிதாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.217.21 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தம்பதிக்கு ரூ.82.17 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications