நிர்மலா சீதாராமன் மீது பாய்ந்த வழக்கு.. தேர்தல் பத்திரத்தில் மிரட்டி பணம் பறித்த புகாரில் அதிரடி
பெங்களூர்: தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் மிரட்டி பணம் பறித்தல், குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பெங்களூர் திலக் நகர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நேற்று சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தனிநபர்களும், பெரிய நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக பணம் வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதற்காக தேர்தல் பத்திரம் என்பது அறிமுகம் செய்யப்பட்டது.

குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனங்கள் ஏதேனும் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க விரும்பினால் அதற்கான தொகையை எஸ்பிஐ வங்கியில் செலுத்தி தேர்தல் பத்திரமாக வாங்க வேண்டும். இதன்மூலம் அந்தந்த கட்சிகளுக்கு நன்கொடை செல்லும். இதற்கிடையே தான் இந்த தேர்தல் பத்திரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக்கூறி அதனை தடை செய்தது. மேலும் தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்கினர் என்ற விபரத்தை வெளியிட அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இதற்கிடையே தான் தேர்தல் பத்திரம் மூலம் பாஜகவினர் மிரட்டி பணம் பறித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகளின் பெயரை பயன்படுத்தி பாஜக பணம் பறித்ததாக புகார்கள் கிளம்பியது. இதுதொடர்பாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பை சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதில் பாஜகவினர் தேர்தல் பத்திரம் மூலம் மிரட்ட பணம் வசூலித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, பாஜக தலைவர் ஜேபி நட்டா, கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் நளின் குமார் கட்டீல், தற்போதைய தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான புகார் தொடர்பாக நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பெங்களூர் திலக் நகர் போலீசுக்கு அதிரடியாக உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் தான் பெங்களூர் திலக் நகர் போலீசார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மற்றவர்கள் மீது இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். மிரட்டி பணம் பறித்தல் மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட பிரிவுகளில் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த முதற்கட்ட தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) அமலாக்கத்துறை இயக்குநரக அதிகாரிகள், அலுவலர்கள், பாஜகவின் தேசிய மற்றும் மாநில பாஜக தலைவர்கள் என யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. நிர்மலா சீதாராமன் பெயர் மட்டுமே நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications