இலவச வாக்குறுதிகளை நிறைவேற்ற.. மக்களிடமே பணத்தை எடுக்கும் அரசு! மின் கட்டணம் கர்நாடகாவில் உயர்வு
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியான 200 யூனிட்கள் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், 200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு ஜூன் மாத மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பதற்கு அக்கட்சி அளித்த வாக்குறுதிகளும் பிரதானமாக இருந்தது.

குறிப்பாக அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், 200 யூனிட் வரையில் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உள்ளிட்ட கவர்ச்சிகர திட்டங்களை அறிவித்தது. வெற்றி பெற்று ஆட்சி அமைந்ததும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்காக முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, கர்நாடக அரசு அறிவித்த 200 யூனிட் வரையிலான இலவச மின்சார திட்டம் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
வாடகை வீட்டில் வசித்தாலும் இந்த இலவச மின்சாரம் பொருந்தும் எனவும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துபவர்களுக்கு கிடையாது எனவும் பல்வேறு விதிகளையும் வகுத்துள்ளது. இந்த நிலையில், 200 யூனிட் மின்சாரத்திற்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ஜூன் மாதத்தில் மின் கட்டணம் ஒரு யூனிட்டிற்கு ரூ.2.89 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது குறித்து கர்நாடக மின் விநியோக நிறுவனம் கூறுகையில், " மின்சார கொள்முதல் மற்றும் எரிபொருள் விலையை ஈடுகட்டும் விதமாகவும்(FPPCA) ஏப்ரல் மாத நிலுவை தொகையையும் சேர்த்து இந்த கட்டணம் கூட்டப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்திற்கான FPPCA கட்டணம் மார்ச் மாதமே கட்டணத்தில் சேர்த்து இருக்க வேண்டும்.
ஆனால் பில்லிங் பிரச்சினைகளாலும் அமல்படுத்துவதற்கான போதிய நேரமின்மை காரணமாகவும் அப்போது வசூலிக்கப்படவில்லை. எனவே, FPPCA வுக்கான 1.49 ரூபாய் ஜூன் மாதத்தில் வசூலிக்கப்பட உள்ளது. இது குறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் ரவிக்குமார் கூறுகையில், " பல தொழில்நுட்ப பிரச்சினைகளால் மின்சார கொள்முதல் மற்றும் எரிபொருள் விலையை ஈடுகட்டும் தொகை மார்ச் மாதம் வசூலிக்க முடியவில்லை.
எனவே, இனிமேலும் அதை வசூலிப்பதை ஒத்திப்போட முடியாது. அதற்கான விதிகளும் இல்லை" என்றார். கர்நாடகாவில் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி விட்டு அதேநாளில் 200 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது கர்நாடக மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications