அடுத்த கெடுபிடி! சிறுபான்மையின மாணவர்களுக்கான பிஹெச்டி கல்வி உதவித் தொகையை குறைத்த கர்நாடக பாஜக அரசு
பெங்களூரு: இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு செல்லக் கூடாது என்று தடை விதித்த கர்நாடக அரசு, தற்போது பிஹெச்டி படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் தொகையை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது.
Recommended Video
கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்க வலியுறுத்தி இந்துத்துவ அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுப்பியில் உள்ள ஒரு பள்ளியில் வெடித்த இந்த பிரச்சனை மாநிலம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

ஹிஜாப் பிரச்சனை
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேலும் கர்நாடக கல்வி நிலையங்கள் மதம் சார்ந்த ஆடைகளை அணிய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக கடந்த தேர்வில் பங்கேற்காமல் ஏராளமான மாணவிகள் தோல்வியடைந்தனர். நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையும் குறைந்தது.

உதவித் தொகை
இந்த நிலையில், தற்போது சிறுபான்மை மாணவர்களுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கையை அம்மாநில அரசு எடுத்து இருக்கிறது. அதன்படி கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பில், பிஎச்டி, எம்பில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கர்நாடக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது.

நிதி குறைப்பு
ஆனால், 2022 - 2023 கல்வியாண்டுக்கான சிறுபான்மை மாணவர்களுக்கான எம்.பில், பி.ஹெச்டி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் 66 சதவீதத்தை கர்நாடக அரசு குறைத்து இருக்கிறது. அதேபோல் 2020 - 2021 மற்றும் 2021 - 2022 கல்வியாண்டில் சேர்ந்த பிஎச்டி மாணவர்களுக்கான ஊக்கத் தொகையில் 33 சதவீதத்தை குறைப்பதாகவும் கர்நாடக அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விதிகளில் மாற்றம்
கொரோனா ஊரடங்கின் காரணமாக மாநில அரசின் வருவாய் குறைந்ததால் உதவித் தொகையை குறைத்திருப்பதாக கர்நாடக அரசு காரணம் கூறி இருக்கிறது. இத்துடன் பிஹெச்டி 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை கிடைக்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பால் ரூ.9 லட்சம் உதவித் தொகை பெற வேண்டிய மாணவர்களுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே கிடைக்கும்.












Click it and Unblock the Notifications