பெங்களூர் விமான நிலையத்தில் காரில் செல்வோர் கவனிக்க வேண்டியவை.. 8ம் நிமிடம் தாண்டினால் புதிய அபராதம்
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் அதிக நேரம் நிற்கும் கார்களுக்கு வருகிற 8-ந்தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி வருகை பகுதியில் பயணிகளை ஏற்றி செல்ல தனியார் கார்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த இலவச அனுமதி 8 நிமிடங்கள் வரை மட்டுமே பொருந்தும். 8 நிமிடங்களுக்கு மேல் 13 நிமிடங்கள் வரை ஆகுமானால் அபராதமாக ரூ.150 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் முதல் செயல்பாட்டில் இருக்கிறது. சுமார் 4000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. ஐடி நிறுவனங்களின் தலைநகரான பெங்களுருவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் செல்கின்றன.

இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 2024ம் ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு 4 கோடியே 8 லட்சம் பயணிகள் வந்து சென்றுள்ளனர். இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு சராசரியாக பெங்களூர் விமான நிலையத்திற்கு 1,11,200 பயணிகள் வந்து செல்கிறார்கள். பண்டிகை காலங்களில் ஒரு நாளைக்கு 1.20 லட்சம் பேர் வரை பயணிக்கிறார்கள்.
இதன் காரணமாக பயணிகளை இறக்கிவிடவும், விமானங்களில் இருந்து வரும் பயணிகளை ஏற்றி செல்லவும் தனியார் கார்கள், டாக்சிகள் அதிக அளவில் அங்கு வருகின்றன. அதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு பயணிகள் வருகை பகுதியில் அதிக நேரம் நிறுத்தப்படும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "கெம்பேகவுடா விமான நிலைய வளாகத்தில் வருகை பகுதியில் வாகனங்களை நிறுத்த ஒழுங்கு விதிகளை அறிமுகம் செய்கிறோம். வருகை பகுதியில் பயணிகளை ஏற்றி செல்ல தனியார் கார்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த இலவச அனுமதி 8 நிமிடங்கள் வரை மட்டுமே பொருந்தும். 8 நிமிடங்களுக்கு மேல் 13 நிமிடங்கள் வரை ஆகுமானால் அபராதமாக ரூ.150 வசூலிக்கப்படும்.
13 நிமிடங்களுக்கு மேல் 18 நிமிடங்கள் வரை ரூ.300 வசூலிக்கப்படும். 18 நிமிடங்களுக்கு மேல் நின்றால் அந்த கார்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அபராதத்துடன் அவற்றை எடுத்து செல்வதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும். மஞ்சள் நிற பதிவெண் உள்ளிட்ட வணிக வாகனங்கள் 10 நிமிடங்கள் வரை அங்கு நிறுத்தப்படலாம்.
அந்த கார்கள் வாகன நிறுத்தும் இடத்திற்கு சென்று நிறுத்த வேண்டும். பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த புதிய விதிமுறையை நாங்கள் அறிமுகம் செய்கிறோம். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications