கர்நாடகா முதல்வராக பதவியேற்ற உடனே.. முதல் உத்தரவே இதுதான்.. சித்தராமையா காட்டிய அதிரடி
பெங்களூர்: கர்நாடாகவின் புதிய முதல்வராக பதவியேற்ற சித்தராமையா பிறப்பித்தத முதல் உத்தரவே, ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பது தான்.
கர்நாடகாவில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஐந்து கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதாவது, அனைத்து குடியிருப்புகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள நபர் ஒருவருக்கு 10 கிலோ இலவச அரிசி, படித்து வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3000 மற்றும் டிப்ளமோ படித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை மற்றும் அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்திருந்தது.

இந்நிலையில் கர்நாடாகவின் புதிய முதல்வராக பதவியேற்ற சித்தராமையா பிறப்பித்தத முதல் உத்தரவே, ஐந்து தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பது தான். இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில், மக்கள் எங்களிடமிருந்து எதிர்பார்க்கும் சிறந்த நிர்வாகத்தினை நாங்கள் நிச்சயம் வழங்குவோம். அமைச்சரவைக் கூட்டத்தில் 5 தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
மக்களது ஆசிர்வாதம் இல்லையென்றால் காங்கிரஸ் கர்நாடகத்தில் ஆட்சியமைத்திருக்க முடியாது. அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றிக்கு காரணமாக இருந்த ராகுல் காந்திக்கு எனது நன்றி. அவரது பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை பயணத்தில் இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. இந்த 5 வாக்குறுதிகள் தவிர்த்து காங்கிரஸின் மற்ற வாக்குறுதிகளும் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என சித்தராமையா கூறினார்.
இந்நிலையில் சித்தராமையாவின் புதிய அமைச்சரவை "கொள்கை" ரீதியாக காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகளை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ₹ 50,000 கோடி செலவாகும். எனினும் இது ஒப்புக் கொள்ளப்பட்டது. நாங்கள் (வாக்குறுதிகள் மீது) பின்வாங்க மாட்டோம். நிதி தாக்கங்கள் இருந்தபோதிலும், உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்றார்.
கர்நாடகா முதல்வர் பதவியேற்பு விழா குறித்து சில தகவல்களை இப்போது பார்ப்போம். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், ஒரு வார காலமாக சித்தராமையாவுடன் முதல் பதவிக்காக நேரடியாக மோதிய நிலையில், இன்று கர்நாடகாவின் ஒரே துணை முதல்வராக பதவியேற்றார். டிகே சிவகுமார் மட்டுமே கர்நாடாவின் துணை முதல்வர் ஆவார். கிட்டத்தட்ட சித்தராமையாவிற்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் உள்ள அமைச்சராகி உள்ளார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் தனது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் கலந்து கொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உறுதியளித்த 5 வாக்குறுதிகளையும் தனது கட்சி நிறைவேற்றும் என்று விழா மேடையிலேயே உறுதியளித்தார்.
ராகுல் காந்தி கூறும் போது, "காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது என்று பல விஷயங்கள் எழுதப்பட்டன, வெவ்வேறு அனாலிசஸ்கள் செய்யப்பட்டன, ஆனால் நாங்கள் ஏழைகள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர், பின்தங்கிய மக்களுடன் நின்றதால் தான் நாங்கள் வெற்றி பெற்றோம் என்று நான் கூற விரும்புகிறேன். ஏழைகளே, எங்களிடம் உண்மை இருந்தது. பாஜகவிடம் பணம், போலீஸ் மற்றும் அனைத்தும் இருந்தன, ஆனால் கர்நாடக மக்கள் அவர்களின் அனைத்து அதிகாரங்களையும் தோற்கடித்தனர். எங்கள் கட்சி கர்நாடாக மாநிலத்தில் தூய்மையான, ஊழலற்ற அரசாங்கத்தை வழங்கும் " கூறினார்.

இன்று காலை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவால் அங்கீகரிக்கப்பட்ட 8 புதிய எம்எல்ஏக்கள் -- ஜி பரமேஸ்வரா, கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், சதீஷ் ஜார்கிஹோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, மற்றும் ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். புதிய அமைச்சர்களுக்கு இன்னும் என்ன துறைகள் என்பது ஒதுக்கப்படாமல் இருந்தது.












Click it and Unblock the Notifications