பெங்களூரில் மெகா முதலீடு.. ஐபோன் உற்பத்தியில் நடக்கும் மாற்றம்! தமிழ்நாட்டையே சீக்கிரம் மிஞ்சிடுமாம்
பெங்களூர்: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில், பாக்ஸ்கான் நிறுவனத்தின் கவனம் பெங்களூர் ஆலை பக்கம் திரும்பியுள்ளது. ஐபோன்களை ஆப்பிள் நிறுவனத்திற்காகத் தயார் செய்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் சில மாதங்களில் மட்டும் பல ஆயிரம் கோடியை பெங்களூரில் முதலீடு செய்துள்ளது.
உலகின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக இருக்கும் ஆப்பிள், தொடர்ந்து தனது மார்கெட்டை விரிவுபடுத்தி வருகிறது. அதேபோல உற்பத்தியையும் அதிகரிக்கிறது. கொரோனாவுக்கு முன்பு வரை சீனாவில் இருந்தே ஐபோன்கள் தயார் செய்யப்பட்டன. இருப்பினும், கொரோனா காலத்தில் சீனாவின் கடுமையான கட்டுப்பாடுகளால் ஐபோன் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டது.

பெங்களூர்
இதையடுத்து சீனாவுக்கு வெளியேயும் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறது. அதன்படி பாக்ஸ்கான் நிறுவனத்திற்குச் சொந்தமான பெங்களூர் ஆலையில் இப்போது மிக பெரிய மாற்றம் நடந்துள்ளது. அதாவது அங்குள்ள புதிய ஐபோன் அசெம்பிளி யூனிட்டில் வெறும் 9 மாதங்களுக்குள் சுமார் 30,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு மிக வேகமாக பாக்ஸ்கான் தனது முதலீட்டை அதிகரித்து வருகிறது. பெங்களூரில் தேவனஹள்ளியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் பெண்களே அதிகளவில் வேலை செய்கிறார்கள். மேலும், இங்குள்ள பணியாளர்கள் பெரும்பாலும் 19 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். மேலும், முதல்முறை பணியாளர்களாகும்.
ஏற்றுமதி
இந்த பெங்களூர் ஆலை முதலில் கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் தான் செயல்பட ஆரம்பித்தது. ஐபோன் 16 மாடல்களுடன் சோதனை உற்பத்தியைத் தொடங்கியது. இப்போது அங்கு ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் அசெம்பிள் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலை உள்ளூரில் வேலை கொடுப்பதோடு ஏற்றுமதிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஏனென்றால் இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் 80%க்கும் அதிகமானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஆலை சர்வதேச விநியோகச் சங்கிலியில் பெற்றுள்ள முக்கியத்துவத்தையே இது காட்டுகிறது.
பிரம்மாண்ட வளாகம்
மேலும், இங்குப் பணியாளர்கள் தங்க வசதியாக ஃபாக்ஸ்கான் ஆறு பெரிய தங்குமிடங்களை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலை அடுத்தாண்டு தான் முழுத் திறனை எட்டும் என சொல்லப்படுகிறது. அப்படி முழுத் திறனை எட்டும்போது சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும். அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கு வேலை செய்யப் பணியாளர்கள் தொடர்ந்து வருகிறார்கள். இதனால் இந்தப் பகுதி குடியிருப்பு, மருத்துவ, கல்வி, மற்றும் பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய ஒரு சிறு நகரமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களில் சுமார் 80% பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இது வரும் காலத்திலும் தொடர்ந்து உயரவே செய்யும். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இந்த தேவனஹள்ளி வளாகம் நாட்டின் வேறு எந்த அரசு அல்லது தனியார் நிறுவனத்தை விடவும் ஒரே இடத்தில் அதிகப் பெண் தொழிலாளர்களைக் கொண்ட ஆலையாக மாறும்.
தமிழகத்தையே மிஞ்சிவிடும்
இங்குப் பணியாளர்களுக்கு இலவசத் தங்குமிடம், மானிய விலையில் உணவு ஆகியவற்றோடு மாதத்திற்குச் சராசரியாக ₹18,000 ஊதியம் வழங்கப்படுகிறது. இது உற்பத்தித் துறையில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த ஊதியங்களில் ஒன்றாகும். இத்திட்டத்திற்காக ஃபாக்ஸ்கான் ₹20,000 கோடி முதலீடு செய்கிறது. இது முழுமையாகச் செயல்படும்போது, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறன் இரண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய தொழிற்சாலையாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இப்போது சுமார் நான்கு அசெம்பிளி லைன்கள் இருக்கிறது. விரிவாக்கப் பணிகள் முழுமையாக முடியும்போது அங்கு 12க்கும் மேற்பட்ட ஐபோன் அசெம்பிளி லைன்கள் இருக்கும். இது தற்போது தமிழகத்தில் இயங்கும் பாக்ஸ்கான் ஆலையின் திறனையும் மிஞ்சிவிடும்.












Click it and Unblock the Notifications