3000 ஆபாச வீடியோக்கள் லீக் முதல் ஏர்போர்ட்டில் கைது வரை.. பிரஜ்வல் விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
பெங்களூர்: பாலியல் பலாத்கார வழக்கில் வெளிநாட்டில் இருந்த பிரஜ்வல், நேற்றிரவு நாடு திரும்பிய போது பெங்களூர் ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதை நாம் பார்க்கலாம்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே பிரஜ்வல் ஆபாச வீடியோக்கள் விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவர் பல பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துள்ளார் என்பதே குற்றச்சாட்டாகும்.

அங்கு லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு இவரது 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்தச் சூழலில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த அவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்..
ஏப்ரல் 19: ஹாசன், மாண்டியா மற்றும் பெங்களூர் ரூரல் தொகுதிகளில் பல இடங்களில் பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ்கள் வீசப்பட்டு இருந்தன. அதைத் தொடர்ந்து இந்த பலாத்கார வீடியோக்கள் சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. கர்நாடக லோக்சபா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோக்கள் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 24: இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மகளிர் அமைப்பான கர்நாடகா ராஜ்ய மகிளா தூர்ஜன்ய விரோதி வேதிகே அம்மாநில மகளிர் ஆணையத்திற்குக் கடிதம் எழுதியது.
ஏப்ரல் 25: இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கக் கோரி முதல்வர் சித்தராமையா மற்றும் டிஜிபி அலோக் மோகன் ஆகியோருக்கு மாநில மகளிர் ஆணையம் கடிதம் எழுதியது.
ஏப்ரல் 26: கர்நாடகாவில் நடந்த முதலாம் கட்ட லோக்சபா தேர்தலில் வாக்களித்த பிரஜ்வல் ரேவண்ணா, தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்தார். இருப்பினும் அன்றைய தினமே இரவு அவர் யாருக்கும் தெரியாமல் நாட்டை விட்டு வெளியேறினார்.
ஏப்ரல் 27: பிரஜ்வல் விவகாரம் குறித்து விசாரிக்கச் சிறப்பு விசாரணையைக் குழுவை அமைத்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.
ஏப்ரல் 28: பிரஜ்வலுக்கு எதிராகச் சிறப்பு விசாரணைக் குழு எஃப்ஐஆர் பதிவு செய்தது.
ஏப்ரல் 30: பிரஜ்வலை கைது செய்யுமாறு கர்நாடக டிஜிபியை தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது. மேலும், மாநிலம் முழுக்க அழுத்தம் அதிகரித்த நிலையில் ,பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக ஜேடிஎஸ் அறிவித்தது.
மே 1: ட்விட்டர் தளத்தில் உண்மை வெல்லும் எனப் பதிவிட்ட பிரஜ்வல், விசாரணைக்கு ஆஜராக ஏழு நாட்கள் அவகாசம் கோரினார்.
மே 2: பிரஜ்வல் டிப்ளோமேடிக் பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற நிலையில், அதை ரத்து செய்யக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
மே 3: ஜேடிஎஸ் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் பிரஜ்வலுக்கு எதிராக இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்தார். பிரஜ்வல் கட்சி அலுவலகத்தில் வைத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார். மேலும் பிளாக் மெயில் செய்ய அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்டதாகத் தனது புகாரில் கூறியிருந்தார்.
மே 4: பிரஜ்வலின் தந்தையும் ஜேடிஎஸ் எம்எல்ஏவுமான ஹெச்.டி. ரேவண்ணா பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரைக் கடத்திய புகாரில் கைது செய்யப்பட்டார்.
மே 5: கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் கர்நாடக ஆளுநரை நேரில் சந்தித்துச் சந்தித்து பிரஜ்வல் வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி வலியுறுத்தினர்.
மே 6: பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்த சிறப்பு விசாரணைக் குழு தனியாக ஹெல்ப் லைனை தொடங்கியது.
மே 13: பிரஜ்வலின் தந்தை எச்.டி. ரேவண்ணா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதே நாளில் பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா திரும்பி வேண்டும் என்றும் விசாரணை அமைப்பு முன் ஆஜராக வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி வலியுறுத்தினார்.
மே 15: பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி 107 பேர் இணைந்து முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினர்.
மே 23: பிரஜ்வல் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா கடுமையாக எச்சரித்தார். தனது பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்றும் தேவகவுடா எச்சரித்தார். அதே நாளில், பிரஜ்வல் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் சித்தராமையா இரண்டாவது கடிதம் எழுதினார்.
மே 27: பிரஜ்வல் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில் மே 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிகாரிகள் முன் ஆஜராகி அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பதாகக் கூறியிருந்தார்.
மே 31: இன்று அதிகாலை அவர் ஜெர்மனியில் இருந்து இந்தியா திரும்பிய நிலையில், பெங்களூர் ஏர்போர்ட்டில் வைத்து அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications