ஆர்சிபி ரசிகையின் உடலில் இருந்த தங்க நகைகள் திருட்டு.. கூட்ட நெரிசலில் மகளை பறிகொடுத்த தாய் கதறல்
பெங்களூர்: ‛‛பெங்களூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த என் 13 வயது மகளின் கம்மல் மற்றும் தங்க சங்கிலியை பிரதே பரிசோதனையின்போது திருடி விட்டனர். அதனை என்னிடம் கொடுத்து விடுங்கள். சென்டிமென்ட்டாக அதனை நான் வைத்திருக்க விரும்புகிறேன். தங்க நகைகளை கொடுத்துவிடுங்கள் என் மகளின் நியாபகமாக வைத்து கொள்கிறேன்'' என்று தாய் ஒருவர் கண்கலங்கி உள்ளார்.
நடந்து முடிந்த 18 வது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள், கர்நாடகா மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அதன்பிறகு கடந்த 4ம் தேதி ஆர்சிபி அணி வீரர்கள் கோப்பையுடன் பெங்களூர் திரும்பினர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து அனைவரையும் வரவேற்றார்.
அதன்பிறகு விதான சவுதா, பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி வீரர்களின் வெற்றி கொண்டாட்ட விழா நடந்தது. ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். அதில் ஒருவர்தான் திவ்யான்ஷி சிவக்குமார். இவருக்கு 14 வயது. விராட் கோலியின் தீவிர ரசிகர். இதனால் ஆர்சிபி ரசிகையானார்.
இந்நிலையில் தான் திவ்யான்ஷி விராட் கோலி உள்பட பிற ஆர்சிபி வீரர்களை நேரில் பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தார். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி அவர் இறந்தார். திவ்யான்ஷி சிவக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில்தான் திவ்யான்ஷி சிவக்குமாரின் உடலில் இருந்த தங்க நகைகள் பிரதே பரிசோதனையின்போது திருடப்பட்டுள்ளதாக அவரது தாய் அஸ்வினி சிவக்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கமர்சியல் தெரு போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில் மகள் திவ்யான்ஷியின் காதில் 6 கிராம் தங்க கம்மல்இருந்தது. கழுத்தில் 5 கிராம் தங்க சங்கிலி இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். பிரேத பரிசோதனையின்போது பவுரிங் அரசு மருத்துவமனையில் வைத்து இந்த நகை திருடப்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திவ்யான்ஷியின் தாய் அஸ்வினி பத்திரிகையாளர்களிடம் கண்கலங்கியபடி கூறியதாவது: என் மகள் இறந்த வருத்தத்தில் நாங்கள் இருந்தோம். அதனால் நகையை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. என் மகளின் உடலை பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்து சென்றபோது நகைகள் இருந்தது. அதன்பிறகு உடலை எங்களிடம் ஒப்படைத்தபோது நகைகள் இல்லை. என் மகள் அணிந்திருந்த கம்மல் அவருக்கு மிகவும் நெருக்கமானது. அதிகமாக அந்த கம்மலை விரும்பினாள். அதனை எனது மகளுக்கு உறவினர் பரிசாக வழங்கியிருந்தார். இதனால் அந்த நகைகள் மீது சென்ட்மெண்ட் உள்ளது. என் மகளின் நினைவாக அதனை நான் வைத்து கொள்ள விரும்புகிறேன். நகையை எடுத்தவர்கள் எங்களிடம் தந்து விடுங்கள்'' என்று கண்கலங்கினார்.












Click it and Unblock the Notifications