கர்நாடகாவில் "அது" கிட்ட போயி "தாபா ஓட்டல் வந்துருச்சு".. மகன் சொன்னதுமே அடுத்த நொடி நடந்த அதிசயம்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ள ஆச்சரிய சம்பவம் ஒன்று இணையவாசிகளின் கவனத்தை திருப்பி வருகிறது.. இப்படிகூட எங்காச்சும் நடக்குமா? என்ற வியப்புடனும், சந்தேகத்துடனும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ளது ஷிகானின் பங்காபுரா.. இங்கு வசித்து வருபவர் பிஷ்டப்பா குடிமணி... இவருக்கு 45 வயதாகிறது.. அந்த பகுதியிலேயே சொந்தமாக, ஸ்டேஷனரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

பிஷ்டப்பா கடந்த சில வருடங்களாக, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதற்கான சிகிச்சையை அவர் எடுத்து கொண்டு வந்த நிலையில், சமீபத்தில், அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை நடந்தது.. அப்போது அவருக்கு திடீரென மூச்சு பேச்சில்லாமல் போய்விட்டது. அவரது பல்ஸ் நின்றுபோய்விட்டது.. பல மணி நேரத்திற்கு வெற்று உடம்பாய் படுக்கையில் கிடந்தார் பிஷ்டப்பா.
தாபா ஓட்டல் வந்துருச்சு அப்பா
டாக்டர்களும் எவ்வளவோ போராடி பார்த்துவிட்டு, பிஷ்டப்பாவை காப்பாற்ற முடியவில்லை, அவரது உயிர் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.. அதற்குள் ஸ்டேஷனரி கடைக்காரர் இறந்துபோன செய்தி, அவரது கிராமம் முழுக்க பரவிவிட்டது. இதனால் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம், தகவல் தரப்பட்டது. ஊர்க்காரர்களும், பிஷ்டப்பாவின் சடலம் கொண்டுவரப்படுவதால், அதற்கான ஏற்பாட்டை செய்ய துவங்கினார்கள்.
இதனிடையே, பிஷ்டப்பாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி, குடும்பத்தினர் வீட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.. அந்த ஆம்புலன்சில் மனைவியும், பிஷ்டப்பாவின் 2 மகன்களும் இருந்தனர்.
ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது இளைய மகன், "அப்பா அங்கே பார்த்தீங்களா.. நீங்க ஆசை ஆசையா சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துடுச்சி, எழுந்திடுங்க" என்று கதறி அழுதுக்கொண்டே சொன்னார்.. இதைக்கேட்டதுமே பிஷ்டப்பா, டக்கென மூச்சை இழுத்து விட்டார்.
யூடர்ன் அடித்த ஆம்புலன்ஸ்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், கிராமத்துக்கு சென்று கொண்டிருந்த ஆம்புலன்சை, அப்படியே யூடர்ன் அடித்து, ஷிகானில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்குள்ள டாக்டர்களிடம் நடந்த சம்பவத்தையும் சொன்னார்கள்.. பிறகு டாக்டர்கள், 2 மணி நேரம் செயற்கை சுவாச கருவி பொருத்தும்படி, நர்ஸ்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
அதன்படியே பிஷ்டப்பாவுக்கு 2 மணி நேரம் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டது.. பிறகு, தீவிர சிகிச்சைக்கு கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரைத்தனர். உடனே அதே ஆம்புலன்சில், கிம்ஸ் மருத்துவமனைக்கு பிஷ்டப்பா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களும், இரங்கல் பதிவுகளும்
இந்த விஷயம் மீண்டும் கிராமத்துக்குள் பரவியதையடுத்து, அனைவருமே ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.. அதுமட்டுமல்ல, பிஷ்டப்பாவுக்காக அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்ட "கண்ணீர் அஞ்சலி" போஸ்டர்களையும் வேக வேகமாக கிழிக்க துவங்கினார்கள்.. உறவினர்களும், நண்பர்களும், பிஷ்டப்பாவுக்காக வைத்திருந்த இரங்கல் ஸ்டேட்டஸ்களும் அவசர அவசரமாக டெலிட் செய்யப்பட்டன... மரணித்து விட்டார் என்று டாக்டரால் அறிவிக்கப்பட்ட நபர், உயிருடன் வந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications