ஆபாச வீடியோ பஞ்சாயத்து.. எல்லாம் 4 - 5 வருஷம் பழையதாம்! சொல்வது பிரிஜ்வல் தந்தை ரேவண்ணா!
பெங்களூர்: கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்நிலையில் இந்த வீடியோக்கள் அனைத்தும் 4-5 ஆண்டுகள் பழையது என அவரது தந்தையும், முன்னாள் அமைச்சருமான ஹெச்.டி.ரேவண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் லோக்சபா தொகுதி மஜத எம்.பியாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகௌடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமாவார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக ஷேர் ஆன நிலையில், இது குறித்து விசாரிக்கக் கோரி முதல்வர் சித்தராமையாவுக்கு மாநில மகளிர் ஆணையத் தலைவர் டாக்டர் நாகலட்சுமி சௌத்ரி கடிதம் எழுதியிருந்தார்.

அதேபோல சோஷியல் மீடியாவில் பரவிய வீடியோவில் உள்ள பெண், தான் கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022 வரை பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஹாசன் மாவட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மகளிர் ஆணைய தலைவர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ரேவண்ணா மீதான வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணைக்கு ஒப்படைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், மஜத கூட்டணியில் இருப்பதால் இந்த விவகாரத்தை காங்கிரஸ் தீவிரமாக கையில் எடுத்திருக்கிறது. நேற்று கர்நாடகாவில் பல இடங்களில் மகளிர் காங்கிரஸார் பிரஜ்வலுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கை விசாரித்து வரும் நிலையில், ஆபாச வீடியோக்கள் 4-5 ஆண்டுகள் பழையது என்று பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா கூறியிருக்கிறார். அதாவது, "இங்கு என்ன சதி நடந்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்கு தெரியும். நான் பயந்து ஓடுகிற ஆள் கிடையாது. இந்த வீடியோக்கள் 4-5 ஆண்டுகள் பழையது. பிரிஜ்வலை கட்சியிலிருந்து நீக்க கட்சி மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் அரசியல் இருக்கிறது. எனவே நான் இது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இதுபோன்று நடப்பது இன்று மட்டுமல்ல. கடந்த 40 ஆண்டுகளாக தேவகௌடாவின் குடும்பம் காங்கிரஸால் குறி வைக்கப்பட்டு வருகிறது. இனி இதற்கு நான் எதிர்வினையாற்ற விரும்பவில்லை. அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும். வழக்கை எஸ்ஐடி விசாரித்து வருகிறது. எனவே இதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications