லிங்காயத் கோட்டையை உடைத்த இஸ்லாமியர்.. பொம்மை மகன் தோற்றது எப்படி? காங்கிரஸ் போட்ட ஸ்கெட்ச்
பெங்களூர்: கர்நாடகாவில் 4 முறை தொடர்ந்து வென்ற முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையின் கோட்டையான சிக்காவி தொகுதி இடைத்தேர்தலில் அவரது மகன் பரத் பொம்மை இன்று தோல்வியடைந்துள்ளார். லிங்காயத் பெல்ட்டான இந்த தொகுதியில் இஸ்லாமியர் வேட்பாளரை வைத்து பசவராஜ் பொம்மையின் மகனை காங்கிரஸ் வீழ்த்தி உள்ளது தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளதோடு அதன் பின்னணி குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை. இவர் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2008, 2013, 2018, 2023 ஆகிய சட்டசபை தேர்தல்களில் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பசவராஜ் பொம்மை பாஜக சார்பில் ஹாவேரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
இதையடுத்து பசவராஜ் பொம்மை தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இந்த சிக்காவி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாஜக சார்பில் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையும், காங்கிரஸ் சார்பில் யாஷிர் அகமது கானும் வேட்பாளராக போட்டியிட்டனர்.
கடந்த 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் யாஷிர் அகமது கான் மொத்தம் 1 லட்சத்து 756ஓட்டுகள் பெற்றார். பரத் பொம்மை 87,308 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் யாஷிர் அகமது கான் 13,448 ஓட்டுகள் வித்தியாசத்தில் பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இது தற்போது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால் சிக்காவி தொகுதி என்பது பசவராஜ் பொம்மை சார்ந்த லிங்காயத் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் இடமாகும். இதனால் தான் கடந்த 4 சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை எளிதாக வென்றார். ஆனால் இப்போது அவரது மகன் பரத் பொம்மை காங்கிரஸ் வேட்பாளர் யாஷிர் அகமது கானிடம் தோல்வியடைந்துள்ளார். யாஷிர் அகமது கான் ஒரு இஸ்லாமியர். இந்த தொகுதியில் லிங்காயத்துக்கு அடுத்ததாக இஸ்லாமியர்கள் 2வது அதிக மக்கள்தொகையாக உள்ளனர். இதனால் தான் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியரான யாஷிர் அகமது கானை களமிறக்கியது.
லிங்காயத் ஓட்டுகள் பாஜகவுக்கு செல்லும்பட்சத்தில் இஸ்லாமியர்களின் ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும். அதோடு லிங்காயத் தவிற பிற மக்களின் ஓட்டுகளை பெறும்போது வெல்லலாம் என்று ‛கை' படை தொடர்ந்து நம்பியது. கடந்த 4 தேர்தலில் காங்கிரஸின் இந்த வியூகம் கைக்கெடுக்கவில்லை. இதனால் தான் கடந்த 2008, 2013, 2018 ஆகிய 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் சையத் அஜீம்பீத் காத்ரி களமிறங்கி பசவராஜ் பொம்மையிடம் தோற்றார்.
அதன்பிறகு கடந்த 2023ல் யாஷிர் அகமது கான், பசவராஜ் பொம்மையிடம் தோற்றார். தற்போது அவர் மீண்டும் களமிறங்கி பசவராஜ் பொம்மையின் மகன் பரத் பொம்மையை வீழ்த்தி உள்ளார். இதன்மூலம் பசவராஜ் பொம்மை மற்றும் லிங்காயத்தின் எஃக்கு கோட்டையாக இருந்த சிக்காவி உடைந்து காங்கிரஸ் வசம் சென்றுள்ளது. இந்த வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம் உள்ளது.
அதாவது கர்நாடகா முதல்வராக சித்தராமையா உள்ளார். இவருக்கு பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர், தலித் மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. இந்த பிரிவை சேர்ந்த மக்களின் ஓட்டுகளை சித்தராமையாவால் கணிசமாக பெற முடியும். இதனை சித்தராமையா திறம்பட செய்தார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் தனது ஆதரவாளர்களை களமிறக்கி செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியின் இந்த சூத்திரம், லிங்காயத்து ஓட்டுகளையே சிதறடித்துள்ளது. இதன்மூலம் பசவராஜ் பொம்மையின் வாரிசான பரத் பொம்மை தோல்வியடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications