தலைமுடியா தங்கமா.. கோடியில் மதிப்பு.. பெங்களூரில் மூட்டை மூட்டையாக தூக்கிய கும்பல்.. என்ன நடந்தது?
பெங்களூர்: இதைக்கூடவா திருடுவார்கள் என்பது போல் பெங்களூரில் தலைமுடியை திருடி சென்ற சம்பவம் நடந்திருக்கிறது. பெங்களூரின் சோழதேவனஹள்ளி பகுதியில் வெளிநாடுகளுக்கு அனுப்ப வைத்திருந்த ரூ.90 லட்சம் மதிப்பிலான தலைமுடி மூட்டைகளை, குடோனின் கதவை உடைத்து 6 பேர் கும்பல் திருடிச் சென்றுள்ளது. இந்த திருட்டு எப்படி நடந்தது என்பது குறித்து இந்த பதிவில் நாம் பார்ப்போம்.
பெங்களூரு சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் லட்சுமிபுரா கிராசில் வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமாக ஒரு பெரிய குடோன் உள்ளது. அங்கு வெங்கடரமணா. மனிதர்களின் தலைமுடியை வாங்கி மூட்டை மூட்டையாக சேமித்து வைத்திருந்தார்.

அந்த தலைமுடியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக குடோனில் வெங்கடரமணா சேமித்து வைத்துள்ளார். அவற்றை சீனா, பர்மா நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு 'விக்' செய்வதற்காக ஏற்றுமதி செய்ய வைத்திருக்கிறார். இதனை அறிந்து கொண்ட சில மர்மநபர்கள், வெங்கடரமணாவின் குடோனின் முன்பக்க இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்திருக்கிறார்கள். பின்னர் அங்கு 27 மூட்டைகளில் இருந்த தலைமுடியை மர்மநபர்கள் திருடி சென்று விட்டார்கள். குடோன் கதவினை உடைத்து, தலைமுடி மூட்டைகள் திருட்டுப்போய் இருப்பதையும் கண்டு வெங்கடரமணா ஆடிப்போனார்.
இதுபற்றி சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் வெங்கடரமணா புகார் அளித்தார். இதையடுத்து சோழதேவனஹள்ளி போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். அத்துடன் குடோன், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது வாகனங்களில் வந்த 6 மர்ம நபர்கள் குடோனில் இருந்த 27 மூட்டை தலைமுடியை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலமாக தலைமுடியை திருடி சென்றவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications