காலில் கூட விழுகிறேன்.. சீனியர் அமைச்சரிடம் மேடையில் கெஞ்சிய கர்நாடகா தலித் அமைச்சர்
பெங்களூர்: ''என்னுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நான் மண்டியிட்டு கைக்கூப்பி உங்களிடம் மன்றாடுகிறேன். என்னுடைய விசுவாசத்தை ஏற்று கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்'' என்று கர்நாடகா தலித் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இன்னொரு அமைச்சரிடம் மேடையிலேயே கைக்கூப்பி கெஞ்சிய சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் அமைச்சர். இவரது அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருப்பவர் எஸ்எஸ் மல்லிகார்ஜுன். இவர் குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது. தாவணகெரே மாவட்டத்தில் இவரது குடும்பம் தான் அரசியலில் ஜொலித்து வருகிறது. வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்.
அதேபோல் கேஎஸ் பசவந்தப்பா என்பவர் அறநிலையத்துறை - மீன்வளத்துறை அமைச்சராக உள்ளார். இவர் தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏவானர். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவரது தந்தை தூய்மை பணியாளராக இருந்தவர்.
தற்போது தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்எஸ் மல்லிகார்ஜுன் தான் இருக்கிறார். இந்நிலையில் தான் அமைச்சர் எஸ்எஸ் மல்லிகார்ஜுனிடம், அமைச்சர் கேஎஸ் பசவந்தப்பா மேடையில் காலில் விழுவதாக கூறி கைக்கூப்பி கெஞ்சிய சம்பவம் நடந்து உள்ளது.
தாவணகெரே மாவட்டத்தில் ஒரே கட்சியில் 2 பேர் அமைச்சர்களாக உள்ளதால் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே யார் பெரியவர்கள்? என்ற பிரச்சனை உள்ளது. அதுமட்டுமின்றி எஸ்எஸ் மல்லிகார்ஜுன் மாவட்டத்தில் எந்த காரணம் கொண்டும் அதிகாரம் தன்னிடம் இருந்து கேஎஸ் பசவந்தப்பா பக்கம் செல்லக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தாவணகெரே காந்தி நகரில் 'மடிகா' சமுதாயத்தினர் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா ஒன்றில் அமைச்சர்கள் எஸ்எஸ் மல்லிகார்ஜுன், கேஎஸ் பசவந்தப்பா ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் அமைச்சர் கேஎஸ் பசவந்தப்பா மேடையில் பேசும்போது அமைச்சர் எஸ்எஸ் மல்லிகார்ஜுனை நோக்கி'' ஒவ்வொரு தேர்தலிலும், காந்தி நகரின் வாக்குகள் முழுவதுமாக காங்கிரசுக்கு செல்கின்றன. உட்கட்சி பூசல்களால் இடைத்தேர்தல்களில் சில வேறுபாடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அதில் எந்த மோசடியும் நடக்கவில்லை.
மல்லண்ணா (அமைச்சர் எஸ்எஸ் மல்லிகார்ஜுன்) இங்குள்ள பிரச்சனையை தீர்க்க முயற்சிக்க வேண்டும். சாமனூர் (அமைச்சர் எஸ்எஸ் மல்லிகார்ஜுன் தந்தை) குடும்பம் தான் எங்களை வளர்த்தது. உங்களை வீழ்ந்து விடாமல் தடுப்பது எங்களின் பொறுப்பு.'
அதேவேளையில் நான் பிறந்து வளர்ந்த காந்தி நகரில் என்னுடன் பக்கத்து வீட்டில் வசித்தவர்கள் தற்போது வைக்கும் கோரிக்கைகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. தாவணகெரேவில் என்னுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நான் மண்டியிட்டு கைக்கூப்பி உங்களிடம் மன்றாடுகிறேன். என்னுடைய விசுவாசத்தை ஏற்று கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
எங்கள் வேதனைகளை கேளுங்கள், காபி கடையில் அமர்ந்துகொண்டு மற்றவர்கள் சொல்வதையும் கேளுங்கள். அடுத்த தேர்தலில் காந்திநகரில் காங்கிரஸுக்குக் குறைவான வாக்குகள் கிடைத்தால், நான் எனது அரசியல் ஓய்வை அறிவிப்பேன்'' என்று பேசினார்.


Click it and Unblock the Notifications
