ராஜினாமா? டெல்லியில் டென்ஷன் ஆன டிகே சிவக்குமார்! கர்நாடகா முதல்வர் ரேஸுக்கு மத்தியில் பரபரப்பு!
டெல்லி : கர்நாடகாவின் அடுத்த முதல்வர் பதவிக்கான ரேஸில் இருக்கும் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் தலைமை, சித்தராமையாவை முதலமைச்சராக்க முடிவெடுத்து விட்டதால், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் காட்டமாக பேட்டி அளித்துள்ளார்.
கடந்த மே 10ஆம் தேதி 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக வெறும் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது.

கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு இடையே, முதல்வர் ரேஸில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஆகியோர் முன்னணியில் உள்ளனர். அதிருப்தி இல்லாமல் முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் தலைமை முயன்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இன்று நடந்து வரும் ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தியும் பங்கேற்றார்.
இதற்கிடையே, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் டெல்லி சென்றுள்ளார். அதேசமயம் முன்னாள் முதல்வர் சித்தராமையா நேற்று முதல் டெல்லியில் முகாமிட்டுள்ளார். முதல்வர் பதவிக்கான ரேஸில் இருக்கும் இருவரும் டெல்லியில் முகாமிட்டு உள்ள நிலையில், இன்று இரவு முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் பதவியை பெற மும்முரம் காட்டி வரும் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இன்று மாலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியாகச் சந்திக்க உள்ளனர். மல்லிகார்ஜூன கார்கேவை மாலை 5 மணிக்கு டிகே சிவக்குமாரும், மாலை 6 மணிக்கு சித்தராமையாவும் சந்திக்க உள்ளனர்.
டி.கே. சிவக்குமார் டெல்லி செல்லும் முன்பு செய்தியாளர்களிடம் பேசுகையில், "கட்சியை ஏமாற்றவோ, கட்சியை மிரட்டி பதவியை பெறவோ மாட்டேன். லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதே எங்களின் அடுத்த இலக்கு. எங்கள் கட்சி ஒன்றுபட்டுள்ளது. யாரையும் பிரிக்க விரும்பவில்லை. நான் பொறுப்பானவன். இன்று நான் இந்த இடத்திற்கு வர காங்கிரஸ் தான் காரணம். காங்கிரஸ் எனும் வீட்டில் நானும் ஒரு அங்கம்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, சித்தராமையாவை கர்நாடகா முதல்வராக காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுத்து விட்டதாகவும், அதனால், டிகே சிவகுமார் அதிரடி முடிவை எடுக்கப்போகிறார் என்றும் ஒரு தகவல் திடீரெனப் பரவியது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், நான் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப்போவதாக பரவும் தகவல் தவறு என விளக்கமளித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி எனக்கு தாய் போன்றது, ஊடகங்கள் நான் பதவியை ராஜினாமா செய்கிறேன் என தவறான செய்தியை வெளியிட்டால் அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications