ஆர்எஸ்எஸ்-க்கு தடை? காங்கிரஸையே எரித்து சாம்பலாக்கிடுவோம்.. கர்நாடகா பாஜக தலைவர் மிரட்டல்
பெங்களூரு: மத்தியில் ஆளும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு கர்நாடகாவில் தடை விதித்தால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையே எரித்து சாம்பலாக்கிவிடுவோம் என்று அம்மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் அறிக்கையில், இந்துத்துவா தீவிரவாத அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்துக்கு தடை விதிப்போம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இந்த வாக்குறுதி மிகப் பெரும் புயலாக மாறியது. பஜ்ரங் தள் தடை தொடர்பான வாக்குறுதி காங்கிரஸுக்கு லேசான பின்னடைவை தந்தது என்கிற ஒரு கருத்தும் இல்லை இல்லை.. இஸ்லாமியர்கள் வாக்குகளை ஒருமுகப்படுத்தி காங்கிரஸ் வெற்றிக்கு உதவியது என்கிற ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

தற்போது கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. புதிய அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனுமாகிய பிரியங் கார்கே தெரிவித்த கருத்து புதிய பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. பிரியங் கார்கே தமது ட்விட்டர் பக்கத்தில், அமைதியை சீர்குலைக்க, வகுப்புவாத வெறுப்பை பரப்ப எந்த ஒரு அமைப்பும் முயன்றாலும் அவற்றை தடை செய்ய காங்கிரஸ் அரசு தயங்காது; அது ஆர்.எஸ்.எஸ். அல்லது வேறு அமைப்பாக இருந்தாலும் பொருந்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு கர்நாடகா மாநில பாஜக தலைவர் நளின்குமார் கட்டீல் அளித்துள்ள பதில்: அமைச்சர் பிரியங் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீதான தடை குறித்து பேசி இருக்கிறார். நாட்டின் பிரதமர் மோடி ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர். நாங்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்தான். பண்டித ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்மராவ் அரசுகள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையோ பஜ்ரங் தள் இயக்கத்தையோ தடை செய்ய முயன்றால் காங்கிரஸை எரித்து சாம்பலாக்கிவிடுவோம். வரலாறு என்ன என்பதை பிரியங் கார்கே படிக்க வேண்டும். பிரியங் கார்கே நாவை அடக்கி பேச வேண்டும். இவ்வாறு நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications