தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
பெங்களூர்: கர்நாடகாவில் கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா எனும் கட்சியை தொடங்கிய ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார். இது ஒரு பக்கம் சர்ச்சையாகி உள்ள நிலையில் ‛‛தாய் மடிக்கே திரும்பியதை போல் ஃபீல் ஆகுது’’ என ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு என்பது கர்நாடகாவில் பாஜக வளர்ந்து கொண்டிருந்த காலம் அது. எடியூரப்பா தலைமையில் பாஜக வேகமாக வளர்ந்தபோது கட்சியுடன் சேர்ந்து அதிகாரமிக்க தலைவராக உருவானவர் தான் ஜனார்த்தன ரெட்டி. கனிமசுரங்க தொழிலில் கொடிகட்டி பறந்தார். பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த ஜனார்த்த ரெட்டி தனது சகோதரர்கள் சோமசேகர ரெட்டி, கருணாகர ரெட்டி ஆகியோருடன் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார்.

2008 ல் கர்நாடகாவில் பாஜக எடியூரப்பா தலைமையில் ஆட்சியை பிடித்தபோது அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏக்களுடன் ரெசார்ட் அரசியல் செய்தார். அதன்பிறகு பாஜக மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது.
அதன்பிறகு ஜனார்த்தன ரெட்டி கனிமசுரங்க ஊழல் வழக்கில் சிக்கி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 4 ஆண்டு சிறை வாசத்துக்கு பிறகு ஜாமீனில் வந்த ஜனார்த்தன ரெட்டி அரசியலில் ஒதுங்கி இருந்தார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கல்யாண ராஜ்ய பிரகதி பக்சா என்ற கட்சியை தொடங்கி கொப்பல் மாவட்டம் கங்காவதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்த ஜனார்த்தன ரெட்டி சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.
போலீஸ் கான்ஸ்டபிள் மகனாக பிறந்து.. "கேஜிஎப் கருடன்" போல மாறிய சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி!
ஜனார்த்தன ரெட்டி சிறைக்கு சென்று வந்திருந்தாலும் கூட வடகர்நாடகாவில் பல்லாரி, கொப்பல் மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் அவரது செல்வாக்கு அப்படியே தான் உள்ளது. இதனால் லோக்சாப தேர்தலுக்கு முன்பாகவே அவரை பாஜக மீண்டும் கட்சியில் இணைத்துள்ளது. ஜனார்த்தன ரெட்டி மீது 7 சிபிஐ வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டது விவாதத்தை கிளப்பினாலும் கூட பாஜக கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் ஜனார்த்தன ரெட்டி மீண்டும் பாஜகவில் இணைந்தது பற்றி மகிழ்ச்சி நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: மோடி என்பது தான் எங்களின் மந்திரம். அவர் தான் உண்மையான விஷ்வகுரு. நான் மீண்டும் தாய் கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாஜக என்பது எனது ரத்தத்தில் உள்ளது. நான் எங்கு உருவாகினேனோ அந்த கட்சிக்கே திரும்ப வந்திருப்பதை தவிர எனக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?.
நான் சில காரணங்களால் பாஜகவில் இருந்து விலகினேன். ஆனால் இப்போது எனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளேன். இதன்மூலம் தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது. பாஜகவின் தலைமை அலுவலகத்துக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு நுழைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.
3வது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பது தான் எனது ஆசையாக உள்ளது. இந்த முறை அது நடக்கும். மொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவை நோக்கி தான் உள்ளது. இதற்கு பிரதமர் மோடி தான் முக்கிய காரணம். ஒரு கட்சி தொண்டனாக நான் எனது பணியை செய்து தலைவர்கள் வெற்றிக்கு கடினமாக உழைப்பேன். நாடு முழுவதும் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. 400 இடங்களில் பாஜக வெல்லும்’’ என்றார்.












Click it and Unblock the Notifications