நடுவானில் "அலறல்.." விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம்.. அத்துமீறிய 52 வயது ஐடி ஊழியர்.. பகீர்
பெங்களூரு: கர்நாடக தலைநகர் பெங்களூருக்கு வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில் இப்போது விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மிடில் கிளாஸ் மக்கள் வருமானம், குறையும் விமான டிக்கெட் ஆகியவை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இதற்கிடையே பல நேரங்களில் விமானத்தில் மிக மோசமான சம்பவங்களும் நடக்கிறது. அதிலும் பெண்களைக் குறிவைத்து நடக்கும் சம்பவங்கள் நெஞ்சைப் பதற வைப்பதாகவே இருக்கிறது.
பாலியல் தொல்லை: அப்படியொரு மோசமான சம்பவம் தான் மீண்டும் நடந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட்டில் இருந்து பெங்களூரு வந்த லுஃப்தான்சா விமானத்தில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவர் புகார் அளித்தார். 52 வயதான நபர் தனக்கு பாலியல் தொல்லை அளித்தாக அந்த பெண் தெரிவித்துள்ளார். அந்த நபர் இங்கிலாந்தில் வசிக்கும் நபர் என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 7) காலை விமானம் பெங்களூர் கெம்பேகவுடா ஏர்போர்ட்டிற்கு வந்த நிலையில், விமானம் தரையிறங்கிய உடன் சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். கடந்த திங்கள்கிழமை இரவு விமானம் பிராங்பேர்ட்டில் இருந்து புறப்பட்ட நிலையில், கொஞ்ச நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாலியல் தொல்லைக்கு உள்ளான இந்த 32 வயதுடைய பெண் திருப்பதியைச் சேர்ந்தவர்.
இதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் 52 வயதான சங்கரநாராயணன் ரங்கநாதன் என்பவர் ஆவார். ஐடி ஊழியரான இவர், திருச்சியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
எங்கே நடந்தது: இது குறித்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், "ஜெர்மனி நாட்டின் ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, அந்தப் பெண் தூங்கிவிட்டார். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த அந்த நபர் தொடையில் கை வைத்ததும் அந்த பெண் திடுக்கிட்டு எழுந்தார். இச்சம்பவம் இரவு 11.45- 12 மணிக்குள் நடந்துள்ளது" என்று கூறபட்டுள்ளது.
அந்தப் பெண் அவரை எச்சரித்துள்ளார். பின்னர் மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து அந்த நபர் மீண்டும் அதே செயலை திரும்பச் செய்துள்ளார். அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பைத் தொட்டு அந்த நபர் அத்துமீறி இருக்கிறார். இதையடுத்து அந்த பெண் இது தொடர்பாக விமானப் பணிப்பெண்ணிடம் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து அந்த பெண்ணை வேறு ஒரு இடத்திற்கு இடம்மாறி அமர வைத்துள்ளனர்.
போலீஸ் விசாரணை: மேலும், இந்தச் சம்பவம் குறித்துக் கடந்த செவ்வாய்க் கிழமை அதிகாலை 2 மணியளவில் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் ஏர்போர்ட்டை அடைந்தவுடன், அங்கே காத்திருந்த சிஐஎஸ்எஃப் வீரர்கள் ரங்கநாதன் என்ற அந்த நபரை கைது செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த விமான நிலைய போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவர் அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மீது ஐபிசி 354Aஇன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் கீழ் அந்த நபருக்கு அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய பைன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து லுஃப்தான்சா தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை.












Click it and Unblock the Notifications