அடப்பாவமே! “டோலோ”வுக்கே தலைவலி.. நாடு முழுவதும் நடந்த அதிரடி வருமானவரி சோதனை - என்னாச்சு?
பெங்களூரு: டோலோ 650 மாத்திரைகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
காய்ச்சல், தலைவலி போன்ற உடல்நல பிரச்சனைகள் ஏற்பட்டால் பலரும் மருத்துவரிடம் கேட்கும் முன்பே எடுத்துக்கொள்ளும் மாத்திரை பாராசிட்டமால்.
இந்த பாராசிட்டமால் வகை மாத்திரிகளை பலர் தயாரித்து வந்தாலும் மைக்ரோலேப்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டோலோ என்ற மாத்திரையே மிகவும் பிரபலம்.

டிரெண்டான டோலோ
குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவிலேயே அதிகளவில் விற்பனையான மாத்திரையாக டோலோ இருந்தது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களும் தீவிர காய்ச்சல் வராமல் இருப்பதற்காக அதிகளவில் டோலோவை உட்கொண்டு வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் 350 கோடி மாத்திரைகளை விற்று ரூ.400 கோடி வரை வருவாய் ஈட்டி சாதனை படைத்தது டோலோ. பாராசிட்டமால் என்று சொல்வதை மறந்து மக்கள் டோலோ என்று சொல்லும் அளவுக்கு அது பிரபலமடைந்தது.

டோலோவுக்கே தலைவலி
சமூக வலைதளங்களில் டோலோ மாத்திரை குறித்து மீம்ஸ்களும், நகைச்சுவை வீடியோக்களும் அதிகளவில் பகிரப்பட்டன. இந்த நிலையில்தான், டோலோவின் உற்பத்தியாளர்களுக்கே தலைவலியை ஏற்படுத்தும் சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் டோலோவை உற்பத்தி செய்யும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் அமைந்து இருக்கிறது.

வருமான வரி சோதனை
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து 20 வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், தலைநகர் டெல்லி, தமிழ்நாடு, சிக்கிம், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள நிறுவனத்துக்கு தொடர்புடைய 40 இடங்களில் 200 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

முக்கிய ஆவணங்கள்
மைக்ரோ லேப்ஸின் தலைமை மேலாண் இயக்குநர் திலிப் சுரானா, இயக்குநர் ஆனந்த் சுரானா ஆகியோரது இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டு இருக்கின்றனர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பெங்களூருவில் உள்ள தலைமையகத்தில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications