11,344 சேலை.. ஜெயலலிதா பொருட்களை ஏலம்விடக்கோரிய வழக்கு.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 11,344 சேலைகள், 750 ஜோடி காலணிகள் உள்பட பல்வேறு விலை உயர் பொருட்களை ஏலம் விடக்கோரிய விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் தகவல் பெறும் மேல்முறையீட்டு ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்தார். முன்னதாக ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிக்கினார்.
ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் எதிராக சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

சொத்து குவிப்பு வழக்கு
இந்த வழக்கு பெங்களூரில் உள்ள தனி நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர்கள் 4 பேரும் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர்கள் 4 பேரும் நிம்மதி அடைந்தனர்.

4 ஆண்டு சிறை
இருப்பினும் கர்நாடக அரசு விடவில்லை. ஜெயலலிதா உள்பட 4 பேருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்போது ஜெயலலிதா மரணமடைந்து இருந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் சிறை தண்டனையை நிறைவு செய்த நிலையில் விடுதலையாகி உள்ளனர்.

சமூக ஆர்வலர் கோரிக்கை
இருப்பினும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. ஆபரணங்கள், ஆடைகள் உள்பட ஏராளமமான பொருட்கள் இங்கு உள்ளன. இந்த பொருட்கள் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பாக உள்ளது. இந்நிலையில் தான் பெங்களூரில் வசித்து வரும் சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.

ஏலம் விடக்கோரிக்கை
இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ‛‛கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் அதன் நிறம் மங்கி விடும். லெதர் காலணியாக இருந்தாலும் அதன் தரம் குறையும். இதனால் இந்த பொருட்களை ஏலம் விட்டு அந்த பணத்தை கருவூலத்தில் சேர்க்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

மேல்முறையீட்டு ஆணையத்தில் விசாரணை
அதன்பிறகு தனது கடிதம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய தகவல் ஆணையத்தில் விபரங்கள் கேட்டு இருந்தார். ஆனால் மத்திய தகவல் ஆணையம் விபரங்கள் எதையும் அளிக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்துக்கு மீண்டும் அவர் கடிதம் ஒன்று எழுதினார். தனக்கு உரிய தகவலை வழங்கும்படி மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இது உச்சநீதிமன்றத்தின் தகவல் பெறும் மேல்முறையீட்டு அதிகார வரம்பு ஆணைய அலுவலகத்தில் விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
அப்போது மனுதாரர் தரப்பில், ‛‛ஜெயலலிதாவி்ன விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் கருவூலத்தில் நீண்ட நாட்களாக அப்படியே உள்ளது. இதனால் ஏலம் விட்டு அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்'' என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை கேட்ட மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பை ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications