ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த சவுமியா ரெட்டி! திருமா கூட பிரசாரம் செய்தாரே! ஜெயநகரில் தோல்வி!
பெங்களூர்: ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமாக இருந்த சவுமியா ரெட்டி ஜெயநகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வியை தழுவினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. 224 தொகுதிகளில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றைய தினம் நடந்தது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்றது. பாஜக 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வென்றுள்ளது. கடந்த முறையை காட்டிலும் காங்கிரஸ் கட்சி 55 இடங்களில் கூடுதலாக வென்றுள்ளது. அது போல் பாஜக கடந்த 2018 தேர்தலை விட 38 இடங்களில் குறைவாக வென்றுள்ளது. மஜதவை பொருத்தமட்டில் 18 இடங்களில் குறைந்துள்ளது.
மற்ற கட்சிகள் கடந்த 3 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 4 இடங்களில் வென்றுள்ளது. தேர்தல் முடிவுகள் நேற்று மதியத்திற்கு மேல் தெரிந்துவிட்ட போதிலும் ஜெயநகர் தொகுதியில் மட்டும் முடிவு தெரியாமல் இருந்தது. இங்கு காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டியும் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தியும் போட்டியிட்டனர். இவர்களுக்கிடையே வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருந்தது.
சவுமியா ரெட்டி முன்னிலையில் இருந்தாலும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இதனால் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தபால் வாக்குகளும் மீண்டும் எண்ணப்பட்டன. மூன்று முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அப்டேட் ஆனது. நள்ளிரவை தாண்டியும் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் நீடித்து வந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு டி.கே. சிவக்குமார் வருகை தந்தார். இதனால் ஜெயநகர் தொகுதி முடிவு அறிவிப்பதில் மீண்டும் இழுபறி நீடித்தது.
முதற்கட்டமாக வாக்கு எண்ணிக்கையில் சவுமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57,591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57,297 வாக்குகளை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் எண்ணப்பட்ட போது 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் வெறும் 16 வாக்குகளில் சவுமியா ரெட்டி தோல்வியுள்ளார். இந்த சவுமியா ரெட்டி யார் தெரியுமா. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என்ற புகாரின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நெறிமுறை சட்டம் 2009 இன் கீழ் விலங்குகள் நலச்சட்டங்களுக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை உருவாக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடர்ந்தது போல் தனிப்பட்ட முறையில் 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர். இந்த மூவரில் ஒருவர் சவுமியா ரெட்டி. இவர் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் துணை உறுப்பினராக உள்ளார். அது போல் கர்நாடகா மகளிர் காஙகிரஸ் மாநிலச் செயலாளரும் அவரே!
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை கேட்டு போராடிய சவுமியா ரெட்டி கர்நாடகா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இவருக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பிரச்சாரம் செய்திருந்தார். இதனால் அவரை தமிழின துரோகி என சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications