கர்நாடகாவை தகிக்க வைத்த தன்வீர்..“அவர் எங்க கட்சியே இல்ல!” பேக் அடித்த குமாரசாமி கட்சி -நாளை ரிசல்ட்
பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு யாரோடு கூட்டணி அமைப்பது என்பது பற்றி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி முடிவெடுத்துவிட்டதாக, அக்கட்சியை சேர்ந்த நபர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நிலையில் அதை அக்கட்சியின் மாநில தலைவர் மறுத்து உள்ளார்.
கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ஆம் தேதி நடந்து முடிந்து இருக்கிறது. நாளை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த சூழலில் தேர்தலுக்கு பிறகு வெளியான பல கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபை அமைவதற்கே வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது.

இதன் மூலம், இந்த தேர்தலிலும் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியையே தேசிய கட்சிகள் நம்பியிருக்கும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு மஜத சார்பில் தன்வீர் அஹமது என்பவர் அளித்த பேட்டி அம்மாநில அரசியலில் விவாதப் பொருளாகி இருக்கிறது.
அவர் பேசுகையில், "தொங்கு சட்டசபை அமைந்தால் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மஜத முடிவெடுத்துவிட்டது. சரியான நேரத்தில் எங்களின் முடிவுகளை நாங்கள் அறிவிப்போம். காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய 2 கட்சிகளுமே கூட்டணி தொடர்பாக எங்களை தொடர்பு கொண்டு இருக்கின்றன." என்று பேசினார்.
தன்வீர் அஹமதுவின் இந்த கருத்து விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், உடனே காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளன. இதுகுறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தெரிவிக்கையில், "மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் தங்கள் முடிவை எடுக்கட்டும். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை." என்றார்.
அதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தன்வீர் அஹமதுவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஷோபா கரண்ட்லாஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறோம். கூட்டணி தொடர்பான எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை." என்றார்.
விவாதத்தை ஏற்படுத்திய தன்வீர் அஹமதுவின் கருத்தை, பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தற்போது மறுத்து இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் சிஎம் இப்ராஹிம், "தன்வீர் அஹமது ஒன்றும் எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிடையாது.
அதுமட்டுமில்லை, அவர் எங்கள் கட்சியின் உறுப்பினரே அல்ல. அவர் எங்களுக்கு யாருமே இல்லை.. எங்களை விட்டு அவர் பிரிந்து சென்று பல காலங்கள் கடந்துவிட்டன. கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்." என்றார்.
இதுவரை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 30 இடங்களுக்கு அதிகமாக வெற்றிபெறாது என்றே தெரிகிறது. ஆனால், குமாரசாமியோ, தங்கள் கட்சி குறைந்தபட்சம் 50 இடங்களில் வெற்றிபெறும் என்றும், தனது நிபந்தனைகளை ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications