கர்நாடகா தேர்தல்: சென்னபட்டணாவில் 'கிங்மேக்கர்' குமாரசாமி எளிதாக கரைசேர முடியுமா? களநிலவரம் களேபரமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் நட்சத்திர தொகுதிகளில் சென்னபட்டணா முக்கியமானது. கர்நாடகாவில் கிங்மேக்கரான ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வாகை சூடியிருக்கிற வலிமை வாய்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சிபி யோகேஸ்வர் இம்முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் கடும் போட்டி நிலவும் என்கின்றன கள நிலவரங்கள்.
224 இடங்களைக் கொண்ட கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்ப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கர்நாடகா தேர்தல் களம் கடந்த சில மாதங்களாகவே அனல் பறந்து கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 123 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதற்கு முன்னதாக ஜேடிஎஸ் 93 தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி 224 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் பாஜக விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது.
கர்நாடகா தேர்தலில் கவனத்தை பெற்ற நட்சத்திர தொகுதிகளில் சென்னபட்டணாவும் ஒன்று. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,21,481. சென்னபட்டணாவில் ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்காளர்களே பெரும்பான்மையினர். இத்தொகுதியில் சுமார் 59% ஒக்கலிகா கவுடா வாக்காளர்கள். அதாவது 1,15,000 பேர் ஒக்கல்லிகா கவுடா வாக்காளர்கள். சிறுபான்மை வாக்காளர்கள் 14.6%. எஸ்சி/எஸ்டி வாக்காளர்கள் 13.7%. இத்தொகுதியில் லிங்காயத்துகள் 5%; குருபாக்கள் 3.5%; இதர பிரிவினர் 4.3% இருக்கின்றனர்.
ஒக்கலிகா கவுடா ஜாதி வாக்காளர்களே பெரும்பான்மையினர் என்பதால் கட்சிகளின் வேட்பாளர்களும் அதே ஜாதியை சேர்ந்தவர்களே பொதுவாக நிறுத்தப்படுவது வழக்கமாகும். 2013-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சென்னபட்ணாவில் முலாயம்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக சிபி யோகேஸ்வர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடா மருமகளும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மனைவியுமான அனிதா குமாரசாமி போட்டியிட்டார். சிபி யோகேஸ்வர் 80,099 வாக்குகளையும் அனிதா 73,635 வாக்குகளையும் பெற்றார். தேவகவுடா குடும்பத்துக்கு, ஒக்கலிகா கவுடா வாக்காளர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் இத்தொகுதியில் கிடைத்த தோல்வி விவாதப் பொருளானது.
2018-ம் ஆண்டு மனைவியின் தோல்விக்கு பழிவாங்க குமாரசாமியே களமிறங்கினார். அ ம்முறையும் சிபி யோகேஸ்வர் போட்டியிட்டார். ஆனால் பாஜக வேட்பாளராக அவர் களமிறங்கினா. 2018 தேர்தலில் குமாரசாமி, 87,995 வாக்குகள் பெற்று அமோக வெற்றியை அறுவடை செய்தார். சிபி யோகேஸ்வர், 66,465 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இதற்கு முன்னர், 2004ம் 2008, 2011, 2013-ம் ஆண்டுகளில் சிபி யோகேஸ்வர் வாகை சூடி இருக்கிறார்.
தற்போதைய தேர்தலில் மீண்டும் குமாரசாமி களமிறங்கி உள்ளார். பாஜக சார்பாக மீண்டும் யோகேஸ்வர் போட்டியிட்டால் களம் கடுமையாக இருக்கும். மேலும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவகுமாரின் குடும்பத்தைச் சேர்ந்த சரத் சந்திரா, ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் இம்முறை காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன தேர்தல் கணிப்புகள். ஆனால் இம்முறையும் கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும்; மீண்டும் ஜேடிஎஸ் குமாரசாமி, கிங்மேக்கராக இருப்பார் எனவும் ஒருதரப்ப்பு கூறுகிறது. கர்நாடகாவின் கிங்மேக்கரான குமாரசாமி, சென்னபட்ணா தொகுதியில் தற்போதைய நிலையில் கடும் போட்டியையே எதிர்கொண்டிருக்கிறார் என்பது களநிலவரம்.












Click it and Unblock the Notifications