அதென்ன பொது சிவில் சட்டம்? கர்நாடகா தேர்தல் அறிக்கையில் பாஜக மீண்டும் முழங்குவது ஏன்?
பெங்களூர்: நாட்டின் அடங்கிப் போயிருந்த பொது சிவில் சட்டம் பிரச்சனைக்கு தற்போது கர்நாடகா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியை அளித்து உயிர் கொடுத்திருக்கிறது மத்தியில் ஆளுகிற பாஜக.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370ஐ ரத்து செய்தது; சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது; இதனைத் தொடர்ந்து அனைத்து மதத்தினருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவரக் கூடும் என பேச்சுகள் எழுந்தன. ஆனால் கொரோனா பாதிப்பு உள்ளிட்டவைகளால் பொது சிவில் சட்டம் எனும் பேராபத்தில் இருந்து தேசம் தற்காலிகமாக மீண்டிருக்கிறது.

தற்போது கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை மூலம் பொது சிவில் சட்டத்தை உயிர்ப்பித்திருக்கிறது பாஜக. பொது சிவில் சட்டம் என்பது மேம்போக்காக பார்த்தால் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பொதுவான சிவில் சட்டம்தானே- தேவைதானே என்பதாக தோன்றலாம். ஆனால் நடைமுறையும் யதார்த்தங்களும் அப்படியானது அல்ல.
நாடு விடுதலை அடைந்த போது, அரசியல் நிர்ணயசபை விவாதங்களிலேயே பொது சிவில் சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் தங்களது கலாசார பண்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு சட்டங்களை கொண்டிருக்கின்றனர். இதனால்தான் இந்து சட்டம், ஷரியத் சட்டம் என இருக்கின்றன. திருமண முறை, விவகாரத்து, ஜீவனாம்சம், சொத்து விவகாரம் இவைகளுக்கு வழிகாட்டக் கூடியதாக இந்த மதம் சார் சட்டங்கள் இருக்கின்றன.
இப்படி மதம் சார் தனித்தனியான சட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரு குற்றவியல் சட்டம் போல, பொதுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது வலதுசாரிகளின் நீண்டகால முழக்கம். ஆனால் இது பிற மதத்தினரது வாழ்வியலில் மிக மோசமான, கடுமையான பாதிப்புகளையும் அவர்களது வாழ்க்கையை முறையையும் சீர்குலைக்கக் கூடியது என்பதால் பொது சிவில் சட்டம் ஆபத்தானது என்கிற எதிர்ப்பு குரல்கள் இயல்பாகவே எழுகின்றன.
இப்படியான ஒரு பொதுசிவில் சட்டத்தைத்தான் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுத்துள்ளது பாஜக. இதனால் கிட்டங்கியில் கிடப்பில் கிடந்த பொது சிவில் சட்டத்துக்கு திடீர் உயிர்ப்பித்தல் தந்துள்ளது பாஜக. இது எத்தகைய புயலை கிளப்புமோ?












Click it and Unblock the Notifications