ஆடிய அஸ்திவாரம்! எடுபடாத அனுமன் அரசியல்.. பாஜகவுக்கு சம்மட்டி அடி! சிலிண்டராலே சாதித்த காங்கிரஸ்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் இறுதிக்கட்டத்தில் இந்துத்துவ அரசியலை காட்டும் வகையில் அனுமன் அரசியலை பாஜக கையில் எடுத்தும் கர்நாடகா மக்கள் செவிமடுக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியின் சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்தே 136 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
கர்நாடகா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் மே 24ல் முடியும் நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

மாநிலம் முழுவதும் மொத்தம் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் கருத்து கணிப்புகளுக்கு அப்பாற்பட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான் பாஜகவின் அனுமன் யுக்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் காஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பான யுக்தியில் எது மக்கள் மத்தியில் பிரபலமானது. இரண்டு கட்சிகளில் எந்த பிரசாரம் மக்களிடம் எடுபட்டது என்பதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே நடந்த இந்த போட்டியில் தற்போது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தேர்தலில் இருகட்சி தலைவர்களும் வெவ்வேறு அம்சங்களை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி சிறுபான்மையினர்களின் ஓட்டுகளை தன்வசப்படுத்த தேர்தல் அறிக்கையில் அனுமன் பக்தர்களின் பஜ்ரங்தளம் அமைப்பை தடை செய்வதாக அறிவித்தது. கர்நாடகாவில் மசூதியில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கு இந்த அமைப்பு தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு பாஜக, பஜ்ரங்தளம் உள்பட பிற இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பாஜக பெரிய அளவில் இந்த விவகாரத்தை கையில் எடுத்து பிரசாரம் செய்தது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்களான அமித்ஷா உள்பட பலரும் காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரான கட்சி என விமர்சனம் செய்தனர். உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தடையாக இருந்த காங்கிரஸ் கர்நாடகாவில் அனுமன் பக்தர்களின் பஜ்ரங்தளத்தை தடை செய்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என தலைவர்கள் பேசினர்.
பிரதமர் மோடி தனது பிரசார மேடைகளில் ‛பஜ்ரங்பலி' என்ற கோஷத்தை முன்வைத்தார். மேலும் பிரதமர் மோடியின் ஊர்வலங்களில் அனுமன் முகமூடி அணிந்து ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதனால் பயந்துபோன காங்கிரஸ் தலைவர்கள் டிகே சிவக்குமார், வீரப்பமொய்லி உள்ளிட்டவர்கள் பஜ்ரங்தள அமைப்பை காங்கிரஸ் தடை செய்யாது. மாநிலத்தில் அனுமன் கோவில்கள் கட்டப்படும் என அந்தர்பல்டி அடித்தனர்.
மேலும் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க விரும்பிய காங்கிரஸ், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ‛தாமரை' கட்சிக்கு எதிரான ஆயுதமாக கையில் எடுத்தது. சிலிண்டர் விலையை குறைப்பதாக கூறிய பாஜக, அதனை செய்வில்லை. மாறாக ஆண்டுதோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உச்சம் தொட்டு தற்போது ரூ.1000யை கடந்து உள்ளது என மாநிலம் முழுவதும் பிரசாரத்தை செய்தனர்.
மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் சிலிண்டருக்கு பூஜை செய்து எதிர்ப்பை காட்டினார். மேலும் ஓட்டுப்பதிவுக்கு முன்பாக பொதுமக்கள் அனைவரும் சிலிண்டருக்கு பூஜை செய்து கும்பிட்டு வந்து வாக்களிக்க வேண்டும் என கூறினார். அதன்படி 10ம் தேதி நிறைய பேர் பொது இடங்களில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பூஜை செய்து ஓட்டளித்தனர். இது பாஜகவை கலங்கடித்தது.
இவ்வாறு பாஜக பஜ்ரங்தள அமைப்பு தடைக்கு விதிப்பதாக கூறியதை காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சி பாஜக தான் சிலிண்டர் விலை உயர்த்தியதாகவும் கூறியும் தீவிர பிரசாரம் செய்தனர். இந்த 2 பிரசாரத்துக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. இந்நிலையில் தான் இருபிரசாரங்களில் எந்த பிரசாரம் வெற்றி பெறும் னெ்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இதில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்று பெற்று தனி மெஜாரிட்டியை எட்டியுள்ளது. மாறாக பாஜக 65, ஜேடிஎஸ் 19 இடங்களில், மற்றவர்கள் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கிறது. பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இதன்மூலம் கர்நாடகாவில் பாஜக கையில் எடுத்த அனுமன் அரசியல் எடுபடவில்லை. மாறாக கர்நாடகாவில் மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்து தனிமெஜாரிட்டியை வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications