கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பாஜகவுக்கு ஆகப் பெரும் ஆறுதல்! வாக்கு வங்கியில் சின்ன கீறல் கூட விழலை!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக வெறும் 65 இடங்களைப் பெற்று ஆட்சியை பறிகொடுத்திருந்தாலும் தமது வாக்கு வங்கியை சிந்தாமல் சிதறாமல் காப்பாற்றி இருக்கிறது என்கின்றன தேர்தல் புள்ளி விவரங்கள். அதேநேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பறிகொடுத்த 5% வாக்குகள்தான் காங்கிரஸின் அபார வெற்றியில் மிகப் பெரிய பங்களிப்பையும் செய்திருக்கிறது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கர்நாடகா தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி காங்கிரஸ் கட்சி 136 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.

1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வரலாறு காணாதவெற்றியாக 178 இடங்களில் வென்றது. அதற்கு பிந்தைய 1994-ம் ஆண்டு தேர்தலில் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தலம் 115 இடங்களில் வென்று மாஸ் காட்டியது. காங்கிரஸ் மீண்டும் 1999-ம் ஆண்டு தேர்தலில் 132 இடங்களில் வென்று அசத்தியது.
ஆனால் 1999-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் எந்த ஒரு கட்சியும் இப்படி ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பெறவே இல்லை. 2004-ல் பாஜக 79 இடங்களையும் 2008-ல் பாஜக 110 இடங்களையும் பெற்றது. 2013-ல் காங்கிரஸ் 122 இடங்களையும் 2018-ல் பாஜக 104 இடங்களிலும் வென்றன. அதன் பின்னர் இந்தத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி 136 இடங்களைக் கைப்பற்றி அசத்தல் வெற்றியைப் பெற்றிருக்கிறது.
2018-ம் ஆண்டு கர்நாடகா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள், வாக்கு சதவீதம்:
பாஜக 104 (36 %)
காங்கிரஸ்- 80 (38 %)
மஜத- 37 (18 %)
ஆனால் 2023-ம் ஆண்டு தேர்தலில் நிலைமை தலைமை கீழாகிவிட்டது. இத்தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்களும் வாக்கு சதவீதமும்:
பாஜக 65 (36 %)
காங்கிரஸ்- 136 (43%)
மஜத- 19 (13%)
அதாவது 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக 39 இடங்களை இழந்துள்ளது. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் காங்கிரஸ் 56 இடங்களை கூடுதலாகப் பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியானது கடந்த தேர்தலைவிட 18 இடங்கள் குறைவாகப் பெற்றிருக்கிறது.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரையில் பாஜக தமது 36% என்ற வாக்கு வங்கியில் கொஞ்சமும் சேதாரமும் இல்லாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதாவது ஆட்சியைப் பறிகொடுத்து வெறும் 65 இடங்களைத்தான் பெற்ற போது, காங்கிரஸுக்கு பேரலையாக இடங்கள் கிடைத்தாக சொல்லப்பட்டாலும் பாஜக தனது 36% வாக்கு சதவீதத்தில் இம்மியளவும் இழக்கவில்லை.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5% கூடுதலாக அதாவது 2018-ம் ஆண்டு பெற்ற 38%-ல் இருந்து 43% வாக்குகளைப் பெற்றுள்ளது. இன்னொன்றையும் இத்தேர்தலில் நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 2018-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் 5% வாக்குகளை இம்முறை இழந்துள்ளது. அதேபோல இதர கட்சிகள் மொத்தம் 7% வாக்குகளை இம்முறை பெற்றுள்ளன; கடந்த தேர்தலில் இதர கட்சிகள் 8% வாக்குகளைப் பெற்றிருந்தன.
ஆக, காங்கிரஸ் கட்சியானது, பாஜகவிடம் இருந்து வாக்குகளைப் பறிக்கவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் இருந்து 5%; இதர கட்சியிடம் இருந்து 1% வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று கோலோச்சி இருக்கிறது என்கின்றன இந்தப் புள்ளி விவரங்கள்.












Click it and Unblock the Notifications