கர்நாடக சட்டமன்ற தேர்தல்.. கோளாறு தரும் 'கோலர்'.. 4வது முறையாக ராகுல் காந்தியின் பிரசாரம் ரத்து
பெங்களூரு: கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோலாரில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த பிரசாரம் ஏற்கனவே 3 முறை ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பிரசாரம் 4வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த ராகுல் காந்தி அப்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக தான் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். இந்த பிரசாரம்தான் தற்போது அவரது எம்பி பதவி பறிபோனதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. அதாவது, இந்த பிரசாரத்தில் மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக அவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.

இதில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அவரது எம்பி பதவி 'மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி' பறிக்கப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதனால் தற்போது அவர் எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதற்கு காரணமாக இருந்த கோலார் தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் 2024ம் ஆண்டுக்கு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்த தொகுதியில் முதன் முறையாக பிரசாரம் மேற்கொள்வதால் இது தொடர்பாக மக்கள் மட்டுமல்லாது அனைத்து அரசியல் கட்சியினரிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
இப்பிரசாரம் ஏப்ரல் 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களுக்காக 6ம் தேதி மாற்றப்பட்டது. ஆனால் அன்றும் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்கவில்லை. எனவே ஏப்ரல் 9ம் தேதியான இன்று நிச்சயம் பிரசாரம் நடக்கும் என கட்சி அறிவித்திருந்தது. ஆனால், இதுவும் தள்ளி போய் 10ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது 10ம் தேதியும் கிடையாது 16ம் தேதி கண்டிப்பாக பிரசார பேரணி நடத்தப்படும் என கர்நாடக காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. ராகுல் காந்தியின் பிரசாரம் தொடர்ந்து தள்ளி போவதால் கட்சி தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதற்கு கட்சியின் மாநில தலைமைதான் காரணமாக சொல்லப்படுகிறது. அடுத்த மாதம் 10ம் தேதி மாநிலம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் இன்னும் 58 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் நிலுவையில் வைத்திருக்கிறது. இந்த தொகுதிகளில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் ஏற்பட்டு வரும் இழுபறி காரணமாகதான் ராகுல் காந்தியின் பிரசார பயணமும் தள்ளி போயுள்ளதாக சொல்லப்படுகிறது. கோலார் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருப்பதால் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் இருக்கிறது. அதேபோல இந்த வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கட்சியினர் கூறுகையில் "இந்த தொகுதியில் வேட்பாளரை நிறுத்தாமல் ராகுல் காந்தியை வைத்து எப்படி பிரசாரம் செய்ய முடியும்? எனவே முதலில் தோகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும். அதில் கட்சி தலைமை கொஞ்சம் தீவிரமாக வேலை பார்க்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் பாஜகவுக்கு இந்த தேர்தல் பின்னடைவைதான் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே இந்த வாய்ப்பை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கட்சி தலைமை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications