‛‛மத்திய அமைச்சருக்கு சீட் கொடுக்காதீங்க’’.. எடியூரப்பா மகன் காலில் விழுந்து கெஞ்சிய பாஜக எம்எல்ஏ
பெங்களூர்: ‛‛நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவில் நல்லவர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போதைய மத்திய இணையமைச்சர் பகவந்த் குபாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது'' என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான பிரபு சவுகான், மேடையில் அனைவரின் முன்பும் பாஜக மாநில தலைவரான எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கர்நாடகாவிலும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் ஒரு தொகுதியிலும், சுயேச்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதேபோன்ற வெற்றியை அறுவடை செய்யும் முனைப்பில் பாஜக உள்ளது.
குறிப்பாக பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் விஜயேந்திரா பீதர் சென்றார். அங்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் ஏராளமானவர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், பீதர் மாவட்டம் அவுராத் சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவுமான பிரபு சவுகான் பேசினார். அப்போது அவர், ‛‛பீதரின் தற்போதைய எம்பி பகவந்த் குபா கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போடுட்டு சிறையில் அடைக்கிறார். பாஜகவில் இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்கிறார். இதனால் அவருக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட டிக்கெட் வழங்க கூடாது'' எனக்கூறினார்.
அதுமட்டுமின்றி தற்போது பகவந்த் குபா பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ரசாயணத்துறை மத்திய இணையமைச்சராக உள்ளார். அவருக்கு நிச்சயம் சீட் வழங்கக்கூடாது எனக்கூறி மாநில பாஜக தலைவர் விஜயேந்திராவின் காலில் அவர் விழுந்தார். இந்த சமயத்தில் விஜயேந்திராவுக்கு அடுத்ததாக பகவந்த் குபா இருந்தநிலையில் சம்பவத்தை அவர் பார்த்து கொண்டிருந்தார்.
பகவந்த் குபா பீதர் நாடாளுமன்ற தொகுதியில் முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் முதல்வர் தரம்சிங்கை வீழ்த்தி எம்பியானார். அதன்பிறகு 2019ல் அவர் வெற்றி பெற்ற நிலையில் மத்திய இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். மாறாக பிரபு சவுகான் பீதர் மாவட்டம் அவுராத் தொகுதியில் 2008, 2013, 2018, 2023 என தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இவர் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தார்.
தற்போது பீதர் மாவட்டத்தில் மத்திய இணையமைச்சர் பகவந்த் குபா மற்றும் பாஜக எம்எல்ஏ பிரபு சவுகான் ஆகியோர் இடையே பிரச்சனை உள்ளது. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் விஜயேந்திராவின் காலில் விழுந்து வரும் தேர்தலில் பீதர் தொகுதியில் பகவந்த் கூபாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க கூடாது எனக்கூறி பிரபு சவுகான் கெஞ்சியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications