சட்டசபையில் விடிய விடிய தர்ணா.. 'பாய், தலையணை' பிளானுடன் வந்த கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள்! என்னாச்சு
பெங்களூர்: மைசூர் வளர்ச்சி ஆணைய (MUDA) வீட்டுமனைகளை முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து விவாதிக்க மறுத்ததை கண்டித்து சட்ட சபையில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட பாஜக முடிவு செய்துள்ளது. மேலும் இதற்காக பாய், தலையணையோடு பாஜக எம்எல்ஏக்கள் வந்துள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். அங்கு தற்போது சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜக பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகிறது.

அந்த வகையில், கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், மைசூர் வளர்ச்சி ஆணைய (MUDA) வீட்டுமனைகள் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க வேண்டும் என்றும் அனுமதி கோரினார். இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் யு.டி. காதர் நிராகரித்தார்.
இதையடுத்து, மூடா முறைகேடு குறித்து விவாதிக்கும் விவகாரத்தில் சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சித்தராமையா கூறும் போது "முடா விவகாரம் பற்றி பாஜக கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை நீங்கள் (சபாநாயகர்) நிராகரித்துவிட்டீர்கள். முடிவை அறிவித்த பிறகு மீண்டும் அதுபற்றி பேசுவதை ஏற்க முடியாது" என ஆவேசமாக கூறினார்.

இதையடுத்து வழக்கமான அலுவல்களை சபாநாயகர் தொடங்கினார். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதற்கிடையே சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், "முடா முறைகேட்டில் சித்தராமையாவுக்கு தொடர்பு உள்ளது. இதுகுறித்து விவாதிக்க அனுமதி கேட்டும் சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை. இதை கண்டித்து நாங்கள் சட்டசபை மற்றும் மேல் சபையில் பகல் - இரவாக தர்ணா நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனக் கூறினார்.

அறிவித்தபடியே, பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள், சட்ட சபையில் இரவில் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் வந்தனர். பாய், தலையணையுடன் வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் சட்ட சபையிலேயே முகாமிட்டுள்ளனர். இரவு உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல் - சபையிலும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இரவிலும் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடிய விடிய சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக அறிவித்து இருப்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications