மக்களை பிரிக்க முயற்சி.. கர்நாடகாவில் ஹிஜாப் தடை நீக்கத்திற்கு எதிராக வரிந்து கட்டும் பாஜக
பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையா நேற்று உத்தரவிட்டார். இதற்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு அதாவது பாஜக ஆட்சியின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அங்குள்ள பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியதோடு பெரும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். ஆட்சி பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை அதிரடியாக ரத்து செய்து அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது:-
மதச்சார்பின்மை: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை திரும்ப பெற உள்ளேன். இனி நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லலாம். ஆடை அணிவது மற்றும் உணவு சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். மக்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த உடையை அணியலாம். இதை நாங்கள் ஏன் தடுக்க வேண்டும்'' என்றார்.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் அரசின் இந்த முடிவுக்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜேயந்திர எடியூரப்பா இது தொடர்பாக கூறுகையில், “இளம் வயதினரை மத அடிப்படையில் பிளவுபடுத்துவதை ஊக்குவிப்பது போல சித்தராமையவின் முடிவு உள்ளது. ஹிஜாப் தடையை திரும்ப பெற்ற சித்தராமையாவின் முடிவு கல்வி நிலையங்களில் மதச்சார்பின்மை பற்றிய கவலையை எழுப்புகிறது.
துரதிருஷ்டவசமானது: கல்வி நிலையங்களில் இது போன்ற பிளவுபடுத்தும் விஷயங்களை ஊக்கப்படுத்துவதை விட கல்வியில் கவனம் செலுத்தக் கூடிய சூழலை உருவாக்குவது அவசியம். பள்ளிகளில் ஹிஜாப் அவசியம் என சிறுபான்மை மதத்தை சேர்ந்த யாருமே கோரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த மாநிலத்திற்கு முதல்வர். ஒரு சமூகத்திற்கு மட்டுமானவரல்ல. இந்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தனது கவலையை திரும்ப திரும்ப வெளிப்படுத்தியுள்ளது. சித்தராமையாவின் நிலைப்பாடு துரதிருஷ்டவசமானது” என்றார்.












Click it and Unblock the Notifications