பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்ததே "தாத்தா" தேவகவுடாதான்.. சித்தராமையா 'திடுக்'
பெங்களூர்: பலாத்கார வழக்குகளில் சிக்கியிருக்கும் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு தப்பி ஓட அனுப்பி வைத்தது தாத்தா தேவகவுடாதான்.. இப்போது அனுதாபம் பெறுவதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவை எச்சரிக்கிறார் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
பலாத்கார வழக்குகளில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் குறித்து அவரது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா நேற்று கூறுகையில், பிரஜ்வல் ரேவண்ணா எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஜேடிஎஸ் கட்சியினருக்கும் வேதனையைக் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரத்தில் பொதுமக்கள் என்னையும் என் குடும்பத்தையும் அவமானப்படுத்துகின்றனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவை பாதுகாக்க நான் முயற்சிக்கவே மாட்டேன். எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு போனது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இந்த வழக்கின் அரசியல் விவகாரங்களை கடவுளே பார்த்துக் கொள்வார்.
பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும். போலீசார் முன்பாக பிரஜ்வல் சரணடைந்து வழக்கை எதிர்கொள்ள வேண்டும். இதனை பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கையாகவும் விடுக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா கருத்து தெரிவிக்கையில், பிரஜ்வல் ரேவண்ணாவை வெளிநாட்டுக்கு தப்ப ஓட அனுமதித்தவரே தேவகவுடா என சந்தேகிக்கிறேன். இப்போது பொதுமக்களிடம் அனுதாபம் பெறுவதற்காக பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எச்சரிக்கை விடுப்பதாக பேசுகிறார் என குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதனிடையே வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வருவதற்கு கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உதவும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும் பிரஜ்வல் விவகாரத்தில் மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பிரஜ்வலின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. ஏப்ரல் 21-ந் தேதியே பிரஜ்வலின் ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் உடனே ஏன் கர்நாடகா காங்கிரஸ் அரசு கைது செய்யவில்லை? பிரஜ்வல் ஏப்ரல் 27-ந் தேதி வெளிநாடு செல்லும் வரை ஏன் காத்திருந்தது என்பதற்கு பதில்தான் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications