காவிரி தீர்மானமா போடுங்க.. நாங்க மேகதாது அணை கட்டுறதுல ரொம்ப பிஸி.. 'கர்நாடகா' டிகே சிவகுமார் 'அடம்'
பெங்களூர்: காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு சட்டசபையில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் கர்நாடகாவுக்கு கவலையே கிடையாது என அம்மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டிகே சிவகுமார் கூறியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணிகள் உள்ளிட்ட கர்நாடகாவின் நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்து பெங்களூரில் நேற்று துணை முதல்வர் டிகே சிவகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கர்நாடகா எதிர்கொள்ளும் காவிரி, கிருஷ்ணா, மகதாயி நதிநீர் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

எங்களுக்கு கவலையே இல்லை: இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் தமிழ்நாடு சட்டசபையில் காவிரி பிரச்சனைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த டிகே சிவகுமார், காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேற்றலாம். அது பற்றி எல்லாம் நாங்கள் கருத்து சொல்லப் போவது இல்லை. கர்நாடகா மாநில விவசாயிகள் நலனை எங்கள் அரசு பாதுகாக்கிறது.
கர்நாடகா வறட்சி: கர்நாடகாவில் தற்போது கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. கர்நாடகா வறட்சியை மத்திய குழுக்கள் 3 நாட்களாக ஆய்வும் செய்திருக்கின்றன. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யவில்லை. பெங்களூரில் கூட நல்ல மழை பெய்தது என்றார்.
மேகதாது -நிலம் இழப்பீடு: இதனிடையே மேகதாது அணை கட்டுவதற்கு கையகப்படுத்துவதற்கு மாற்றாக இழப்பீடு வழங்குவதற்காக 4 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என டிகே சிவகுமார் கூறியுள்ளார். பெங்களூர், மண்டியா, சாம்ராஜ்நகர், ராம்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த மாற்று நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மேகதாது அணை கட்டும் இடத்தில் வனத்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் டிகே சிவகுமார் தெரிவித்தார்.
மேகதாது அணையும் கர்நாடகாவும்: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டுகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், உச்சநீதிமன்ற விசாரணையில் மேகதாது அணை கட்ட நீதிபதிகள் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றனர் என ஒரு பிரசாரத்தை கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்கிறது கர்நாடகா அரசு.












Click it and Unblock the Notifications