6 மண்டலம்.. 4+2 கர்நாடகாவை ‛ஸ்வீப்’ செய்யும் காங்கிரஸ்! ஆட்சியை இழக்கும் பாஜக? இதுதான் புதிய சர்வே!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபைக்கு இன்னும் 8 நாளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களில் 4 மண்டலங்களை காங்கிரஸ் கட்சியும், 2 மண்டலத்தை பாஜகவும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் கட்சி பற்றியும், அந்த கட்சி எவ்வளவு இடங்களை கைப்பற்றும் எனவும் இந்த சர்வே கணித்துள்ளது.
கர்நாடகாவில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிப்பதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் ஒரு கட்சி ஜெயிக்க வேண்டும்.

இதனால் கர்நாடகா தேர்தலில் ஆட்சியை நிர்ணயிக்கும் மேஜிக் நம்பரான ‛113' க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் முனைப்பில் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
புதிய கருத்து கணிப்பு: அந்த வரிசையில் தற்போது C Daily Tracker சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த கருத்து கணிப்பின்படி கர்நாடகாவில் உள்ள 6 மண்டலங்களிலும் 4 மண்டலங்களில் பாஜக, ஜேடிஎஸ்ஸை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஹைதரபாத் கர்நாடகா, மும்பை கர்நாடகா, பழைய மைசூர், கடலோர கர்நாடகா, மத்திய கர்நாடகா, பெங்களூர் என 6 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்கள் வாரியாக பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் கைப்பற்றும் தொகுதிகளின் விபரம் வருமாறு:
மும்பை-கர்நாடகா: மும்பை கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 2 முதல் 5 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் 2 தொகுதிகயிலும், மற்றவர் ஒரு தொகுதியிலும் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இந்த மண்டலத்தில் 42 முதல் 45 தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் மும்பை-கர்நாடகா மண்டலத்தில் உள்ள 90 சதவீத தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஸ்வீப் செய்யும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
பழைய மைசூர்: பழைய மைசூர் மண்டலத்தில் மொத்தம் 55 தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 2 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 20 முதல் 26 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி 28 முதல் 34 தொகுதிகளிலும், மாற்றவர் ஒரு இடத்திலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மைசூர் மண்டலம் என்பது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாகும். இங்கு தான் அக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றும். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் ஜேடிஎஸ்ஸை விட காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மண்டலம்: பெங்களூர் நகர் மற்றும் பெங்களூர் புறநகர் மாவட்டங்களில் மொத்தம் 32 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பெங்களூர் மண்டலமான இந்த பகுதியிலும் பாஜக, ஜேடிஎஸ் கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமுள்ள 32 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 20 முதல் 24 தொகுதிகளில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக 8 முதல் 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வாகைசூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்-கர்நாடகா: ஹைதரபாத் கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 31 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 27 முதல் 29 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஹைதராபாத் கர்நாடகா மண்டலத்தில் உள்ள தொகுதிகளை காங்கிரஸ் கட்சி ஸ்வீப் செய்ய வாய்ப்புள்ளது. மாறாக பாஜக 1 முதல் 3 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 1 முதல் 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவின் கலபுரகி மாவட்டம் உள்ளது. இங்கு தற்போது மல்லிகார்ஜூன கார்கே தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கர்நாடகா: மாறாக மத்திய கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகா மண்டலங்களில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியை விட பாஜக அதிக தொகதிகளை கைப்பற்றலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கர்நாடகா மண்டலத்தில் மொத்தம் 35 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 16 முதல் 21 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு காங்கிரஸ் கட்சி 10 முதல் 16 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 1 முதல் 2 தொகுதிகளிலும், மற்றவர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர கர்நாடகா: அதேபோல் கடலோர கர்நாடகா மண்டலம் என்பது பாஜகவின் கோட்டையாக உள்ளது. இங்கு மொத்தம் 21 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக 10 முதல் 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 5 முதல் 9 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் தேர்தலிலும் கடலோர கர்நாடகா மண்டலத்தில் பாஜக தொடர்ந்து தனது செல்வாக்கை நிலைநாட்டும் என்பது சி டெய்லி டிராக்கர் கருத்து கணிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக்கு மெஜாரிட்டி: மேலும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 130 முதல் 157 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக இந்த தேர்தலில் பாஜக 37 முதல் 56 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். கடந்த 2018 தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சுமார் 48 தொகுதிகளை பறிகொடுக்கலாம் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. மாறாக 22 முதல் 34 தொகுதிகள் வரை ஜேடிஎஸ் கட்சி கைப்பற்றும். இதுதவிர 7 சதவீத வாக்குகளுடன் மற்றவர்கள் அதிகபட்சமாக 3 தொகுதிகளை கைப்பற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications