செம ட்விஸ்ட்.. 6ல் 4 டிவிஷனில் ஸ்வீப்.. கர்நாடகாவை வென்ற காங்கிரஸ்.. பாஜகவுக்கு விழுந்த சம்மட்டி அடி
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கரிஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் அங்குள்ள 6 மண்டலங்களில் 4ல் காங்கிரஸ் கட்சி ஸ்வீப் செய்துள்ளது. மாறாக பாஜக 2 மண்டலங்களில் மட்டுமே காங்கிரஸை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் மண்டல வாரியாக காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் பெற்ற இடங்களின் விபரம் வருமாறு:
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த 10ம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 73.17 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மதியம் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் முன்னிலை வெற்றது. பாஜக வெறும் 63 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 21 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி அடித்து தூள்கிளப்பி உள்ளது. இதனால் பாஜகவினர் கடும் ஷாக்காகி உள்ளனர்.
குறிப்பாக 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்திய பழைய மைசூர் மண்டலத்திலும் பாஜகவுக்கு பெரிய அளவில் அடி விழுந்துள்ளது. இந்நிலையில் தான் டிவிஷன் வாரியாக கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் முன்னணியில் உள்ள விபரம் வெளியாகி உள்ளது.
அதன்படி மத்திய கர்நாடகா மாவட்டத்தில் மொத்தம் 23 தொகுதிகள் உள்ளன. இது பாஜகவின் கோட்டையாகும். ஆனால் இந்த முறை பாஜகவின் கோட்டையில் பெரிய அளவில் ஓட்டை விழுந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக 8 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கும் நிலையில் ஜேடிஎஸ், சுயேச்சைகள் ஒரு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றனர்.
மும்பை -கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 50 தொகுதிகள் உள்ளன. இங்கு கடந்த முறை பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை தட்டித்தூக்கி உள்ளது. அதாவது மொத்தம் 32 இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக 17 இடங்களிலும், ஜேடிஎஸ் ஒரு இடத்திலும் மட்டுமே முன்னிலை வகிக்கின்றன.

ஓல்டு மைசூர் மாவட்டம் எப்போது ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றும். பாஜகவுக்கு இங்கு செல்வாக்கு என்பது கிடையாது. இந்நிலையில் தான் இந்த முறை பிரதமர் மோடி இங்கு அதிக கவனம் செலுத்தினார். ஆனால் பாஜக பெரிய அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது.
மேலும் பழைய மைசூர் மாவட்டங்களில் உள்ள 64 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது 50 சதவீதத்துக்கு அதிகமாகும். ஜேடிஎஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. இதன்மூலம் ஜேடிஎஸ் கட்சியின் கோட்டை உடைந்துள்ளது. மாறாக பாஜக வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
அதேசமயம் ஹைதராபாத்-கர்நாடகா டிவிஷனில் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு தான் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியும் வரும். இந்நிலையில் தான் ஹைதராபாத்-கர்நாடகா டிவிஷனில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில், பாஜக 10 இடங்களிலும் ஜேடிஎஸ் 3 இடங்களிலும், மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.
மாறாக பெங்களூரில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றுகிறது. மொத்தம் 28 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி ஒரு தொகுதியிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேபோல் கடலோர கர்நாடகா மாவட்டத்தில் உள்ள 19 தொகுதிகளிலும் பாஜகவின் கொடி மீண்டும் பறக்கிறது. இங்கு 13 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், ஜேடிஎஸ், சுயேச்சைகள் தலா ஒரு தொகுதியிலும் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.
இதன்மூலம் கர்நாடகாவில் உள்ள மத்திய கர்நாடகா, ஹைதரபாத் கர்நாடகா, மும்பை-கர்நாடகா, ஓல்டு மைசூர் ஆகிய 4 மண்டலங்களில் காங்கிரஸ் கட்சி ஸ்வீப் செய்துள்ளது. மாறாக பெங்களூர் மற்றும் கடலோர கர்நாடகாவில் மட்டுமே பாஜக, காங்கிரஸ் கட்சியை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications