கிராமப்புறத்தில் மட்டுமில்லை.. நகரங்களிலும் பாஜகவை வீழ்த்தியது காங்கிரஸ்.. இதோ டேட்டா!
பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகத்தில் கிராமப்புற தொகுதிகளில் வெற்றியை வாரி குவித்த காங்கிரஸ் நகரங்களிலும் பாஜகவிற்கு கடும் சவால் அளித்து அக்கட்சியை வீழ்த்தியிருக்கிறது. அது குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.
கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. கர்நாடகாவில் தொங்கு சட்ட சபைக்கு வாய்ப்பு என்று பெரும்பாலான கணிப்புகள் கூறிய நிலையில், அதையெல்லாம் தவிடு பொடியாக்கி காங்கிரஸ் அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றியை பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த மேஜிக் எண்ணை காங்கிரஸ் எளிதாக தாண்டிவிட்டது. பாரதிய ஜானதா 65 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. குறிப்பாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, ஒரு வீட்டுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இது அப்படியே இன்றைய தேர்தல் முடிவில் பிரதிபலித்ததை பார்க்க முடிந்தது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி கிராமப்புற தொகுதிகளில் வெற்றியை அள்ளியது.
கர்நாடகாவை பொறுத்தவரை கிராமப்புற தொகுதிகளாக 151 தொகுதிகள் உள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி 97 இடங்களை மொத்தமாக சுருட்டியது. பாஜக பாதிக்கு குறைவான இடங்களையே வென்று பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அதாவது 34 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் 17 தொகுதிகளிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் வென்றன.

காங்கிரஸ் கட்சி கிராமப்புற தொகுதிகளைத்தான் மொத்தமாக வாரி இறைத்தது என்றால் நகர்ப்புற தொகுதிகளையும் விட்டு வைக்கவில்லை. படித்த மக்கள், வசதி படைத்தவர்கள், அதிகம் கொண்ட நகரப்பகுதிகளிலும் இம்முறை காங்கிரஸ் , பாஜகவுக்கு கடும் சவால் கொடுத்துள்ளது. சொல்லப்போனால் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதி கூடுதலாகவே வென்று நகரப்புற தொகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது.
நகர்புறங்களை பொறுத்தவரை மொத்தம் உள்ள 47 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 24 இடங்களிலும் பாஜக 23 இடங்களிலும் வென்றுள்ளது. நகர்ப்புற மக்கள் மத்தியில் பா.ஜ.க. செல்வாக்கை இழந்திருப்பதே இதை காட்டுவதாக இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சிக்கும் வலுவான எதிர்க்கட்சி வாய்ப்பை கர்நாடக மக்கள் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications