கர்நாடகாவில் கெத்து காட்டும் காங்கிரஸ்.. டாப் வாக்கு சதவிகிதம்! பின்னால் வரும் பாஜக! அப்போ மஜத எங்கே
பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதில் காங்கிரஸ் கட்சி பெற்று வாக்கு சதவிகிதம் நம்மை கவனிக்க வைத்துள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. இதில் தொடக்கத்தில் தபால் வாக்குகளை எண்ணும் போது பாஜக முன்னிலையில் இருந்தது. இருப்பினும், தேர்தல் நாளில் பதிவான வாக்குகளை எண்ணத் தொடங்கிய போது நிலைமை மாறியது.
பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலைக்கு வந்தது. இப்போது அங்கே சுமார் 110க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ், சுமார் 80 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது. மஜத 30 தொகுதிகள் வரை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 10ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. அங்கே மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், 113 தொகுதிகளில் வெல்லும் கட்சியே பெரும்பான்மையைப் பிடிக்கும். தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மற்றொரு முக்கிய விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தற்போது வரை சுமார் 43 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேநேரம் அங்கே பாஜக 36 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. மஜத கட்சி இதுவரை 13% வாக்குகளைப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்கிறது என்பதற்கு இணையாக அவர்கள் எத்தனை சதவிகித வாக்குகளைப் பெறுகிறார்கள் என்பதும் ரொம்பவே முக்கியம். ஏனென்றால் ஒரு வாக்கு குறைவாகப் பெற்றாலும் தொகுதியை ஒரு கட்சி இழக்கும். ஆனால், எத்தனை சதவிகிதம் பேர் ஒரு கட்சிக்கு ஆதரவாக உள்ளனர் என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்ள வாக்கு சதவிகிதமே உதவும்.

அதன்படி காங்கிரஸ் கட்சி இதிலும் தெளிவான முன்னிலை இருக்கிறது. வாக்கு சதவிகிதம் குறைவாகப் பெற்றாலும் சில மாநிலங்களில் கட்சி ஆட்சியைப் பிடிக்கப் பிடிக்கும். ஆனால், கர்நாடகாவில் அதுபோல இல்லாமல். காங்கிரஸ் வாக்கு சதவிகிதத்திலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளித்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.
கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸின் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ஜே.டி.எஸ்., தலைவர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் தொகுதிகள் கவனிக்கத்தக்கத் தொகுதிகளாக இருக்கிறது.
224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் மாநிலத்தில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.












Click it and Unblock the Notifications