கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கம்! இரவோடு இரவாக வந்த உத்தரவு! என்னாச்சு?
பெங்களூர்: கர்நாடகாவின் ஷிவமொக்கா லோக்சபா தொகுதியில் சுயேச்சை போட்டியிட விண்ணப்பித்த பாஜகவின் கே.எஸ். ஈஸ்வரப்பாவை கட்சியில் இருந்து 6 ஆண்டுகள் நீக்கி அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் ஏப்ரல் 26ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் அடுத்து மே 7ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
ஈஸ்வரப்பா நீக்கம்: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பதால் அங்கு பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சூழலில் திடீரென மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கே.எஸ். ஈஸ்வரப்பாவை பாஜகவில் இருந்து 6 ஆண்டுகள் நீக்குவதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
அய்யய்யோ.. என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க 'வெளிநாட்டு சதி’.. கர்நாடகாவில் மோடி திடீர் பேச்சு!
இது தொடர்பாகக் கர்நாடக பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவர் லிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கட்சியின் அறிவுறுத்தலை மதிக்காமல், சிவமொக்கா லோக்சபா தொகுதியில் ஈஸ்வரப்பா சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து கட்சிக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் செயலாகும். எனவே அவர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக விடுவிக்கப்படுகிறார். மேலும் அவர் ஆறு ஆண்டுகளுக்குக் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை: வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு இன்று முடிவடைந்தது. அதற்குள் ஈஸ்வரப்பா தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அவர் வாபஸ் பெறாத நிலையில், அவருக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக அறிவித்தது. ஷிவமொக்கா தொகுதிக்கு மே 7ம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
என்ன காரணம்: ஹாவேரி தொகுதியில் தனது மகன் கே.இ.காந்தேஷுக்கு சீட் தருமாறு ஈஸ்வரப்பா கேட்டுள்ளார். இருப்பினும் பாஜக சீட் வழங்காத நிலையில், ஈஸ்வரப்பா அதிருப்தி அடைந்தார்.
அதன் பின்னரே பாஜக சார்பில் ஷிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் கர்நாடக முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகனான ராகவேந்திராவை எதிர்த்துப் போட்டியிட உள்ளதாக ஈஸ்வரப்பா அறிவித்தார். மேலும், எடியூரப்பா துரோகம் செய்ததாக வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினார். அதன் பிறகே அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனுவை வாபஸ் பெறும் காலம் முடிந்துவிட்ட நிலையில், அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. அதன் பின்னரே இப்போது அவரை கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு ஈஸ்வரப்பா தரப்பில் இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை.
எடியூரப்பா மீது சாடல்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வாரிசு அரசியல் செய்வதாக என்று குற்றஞ்சாட்டிக் கடந்த காலங்களிலும் ஈஸ்வரப்பா அடிக்கடி விமர்சித்துள்ளார். அப்போதெல்லாம் அவர், "பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை தான் எனது இலக்கு.
தேசிய அளவில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் வாரிசு அரசியலை நான் எதிர்க்கிறேன். அதேபோல கர்நாடக மாநிலத்தில் பாஜகவை எடியூரப்பா குடும்பத்திடம் இருந்து விடுவிப்பதே எனது நோக்கம்” என்று கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வெளிப்படையாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications