கர்நாடகா: மனைவிக்கு 14 மனைகள் ஒதுக்கீடு- சித்தராமையாவிடம் விளக்கம் கேட்ட ஆளுநர்- காங்கிரஸ் கொதிப்பு!
பெங்களூர்: கர்நாடகா முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் (மூடா) 14 மனைகளை சட்டவிரோதமாக ஒதுக்கிய விவகாரத்தில் சித்தராமையாவிடம் மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் விளக்கம் கேட்டுள்ளதாக வெளியான தகவல் காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ஆளுநர் என்பவர் அரசியல் சாசன வரையறைகளுக்குட்பட்டுதான் செயல்பட வேண்டும்; இந்த வரையறைகளை மீறி அரசியல் ரீதியாக செயல்படக் கூடாது என அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியமானது சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த மனைகள் ஒதுக்கீடு சட்டவிரோதமானது; ஆகையால் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்கிறது பாஜக.

ஆனால் மனைவி பெயரிலான நிலத்தை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்தது. இதற்கு இழப்பீடாகத்தான் 14 மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்கிறார் சித்தராமையா.
இந்த விவகாரத்தில் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி மைசூர்- பெங்களூர் பாதயாத்திரை நடத்த இருக்கிறது பாஜக. முன்னதாக கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை பாஜக பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து இந்த முறைகேடு தொடர்பாக புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தது.
தற்போது, இந்த புகாரின் அடிப்படையில் முதல்வர் சித்தராமையாவிடம் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வமான ஆளுநர் மாளிகையில் இருந்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ஆளுநர் என்பவர் அரசியல் சாசனத்தின் சில வரையறைகளுக்கு உட்பட்டுதான் செயல்பட வேண்டும். தற்போது ஆளுநர் விளக்கம் கேட்டிருப்பதாக வெளியான தகவல்கள் உறுதியாகவில்லை. அதேநேரத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் என்றால் நிச்சயம் அரசியல் நோக்கம் கொண்டது; அரசில் ஆளுநர் தலையிடுகிறார் என்றுதான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் மேற்கு வங்கத்திலும் ஆளுநர்கள் இப்படித்தான் அரசியல் ரீதியாக அரசிலும் தலையிட்டனர். தற்போது கர்நாடகாவிலும் அப்படியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை நாங்கள் எதிர்கொள்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications