கர்நாடக ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு.. நிகழ்ச்சிகள் ரத்து.. வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
பெங்களூர்: கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் தனிமைபடுத்திக் கொண்டார்.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் என பல கட்டுப்பாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை முடக்கி போட்ட கொரோனா அதன்பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இருந்தாலும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து புது வகை கொரோனாவாக பரவி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது. பிறகு பாதிப்பு சற்று தணிந்தது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது.
அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதன்பிறகு தொற்று பாதிப்பு அதிகரிப்பதும் குறைவதும் என மாறி மாறி வருகிறது. கர்நடாகவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அங்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆளுநர் தனிமைபடுத்திக் கொண்டார். ஆளுநரின் அனைத்து நிகழ்ச்சிகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications