தேவகவுடா பேரன் வெற்றி செல்லாது.. பிரஜ்வால் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்து கர்நாடக ஐகோர்ட் அதிரடி
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதி உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணாவை தகுதி நீக்கம் செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சொத்து விவரங்கள், பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக பிரஜ்வால் ரேவண்ணாவின் எம்.பி பதவி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் கர்நாடகா அமைச்சர் ஹெ.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணா, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா தான்.

இந்த நிலையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கலின் போது போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாஜக வேட்பாளர் மஞ்சு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019 மக்களவை தேர்தலின் போது பிரமாணப் பத்திரத்தில், ரூ.24 கோடிக்கும் அதிகமான வருமானத்தை பிரஜ்வால் ரேவண்ணா மறைத்ததாக குற்றம்சாட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையத்திடம் தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகக் கூறி, மதச்சார்பற்ற ஜனதாதள எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவின் தேர்தல் வெற்றி செல்லாது என உத்தரவிட்டார்.
பிரஜ்வால் ரேவண்ணா தனது சொத்துக்கள், கடன்கள் மற்றும் வங்கி நிலுவைகள் உட்பட முதலீடுகள் பற்றிய முழு விவரங்களையும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கவில்லை, மேலும் அவர் அளித்த பெரும்பாலான தகவல்கள் தவறான தகவல்கள், அவர் வருமான வரிக் கணக்கை சமர்ப்பிக்கத் தவறிவிட்டார் என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
பிரஜ்வால் தனது தந்தை ரேவண்ணா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலமாக, வாக்களிக்காதவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, தனக்கு ஆதரவான பினாமி வாக்காளர்கள் மூலம் வாக்களித்ததை உறுதிசெய்ததன் மூலம், பிரஜ்வால் மோசடி செய்ததையும் மனுதாரர்கள் நிரூபித்துள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அவரது தந்தை பதவியை தவறாக பயன்படுத்தியதன் மூலம் பிரஜ்வால் வெற்றி பெற்றுள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், பாஜக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்த மஞ்சுவை வெற்றி பெற்றவர் என அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையையையும் நிராகரித்தது உயர் நீதிமன்றம். "ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்" என்பதால், மஞ்சுவை வெற்றி வேட்பாளராக அறிவிக்க முடியாது எனக் கூறி உயர் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை தள்ளுபடி செய்தது.












Click it and Unblock the Notifications