"மத அடையாளம்..அழித்துவிட்டு உள்ள வா" குங்குமத்தோடு வந்த மாணவர்! திருப்பி அனுப்பிய கல்லூரி நிர்வாகம்
பெங்களூர்: கர்நாடகாவில் குங்குமம் அணிந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவர் வகுப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் போடப்பட்ட ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு அம்மாநில உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு முடியும் வரை மாணவ, மாணவியர் மத அடையாளம் கொண்ட உடைகளை, ஆபரணங்களை அணிந்து வகுப்பிற்கு வர கூடாது என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கு பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராடிய நிலையில்தான் தற்போது இந்த மோதல் மற்றும் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு கல்வி நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஹிஜாப்போடு வகுப்பிற்கு வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

குங்குமம்
இந்த நிலையில் விஜயபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர் குங்குமம் அணிந்து வந்ததால் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்து மதத்தை சேர்ந்த மாணவர் ஒருவர்நெற்றியில் குங்குமம் அணிந்து வகுப்பிற்கு வந்துள்ளார். வகுப்பிற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்ட அவர் ஆசிரியர்கள் மூலம் வெளியே அனுப்பப்பட்டார். அவரிடம் நீங்கள் குங்குமத்தை அழித்துவிட்டு உள்ளே வாருங்கள். இல்லை என்றால் அனுமதிக்க மாட்டோம் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறி உள்ளனர்.

திருப்பி அனுப்பினர்
அதற்கு அந்த மாணவர்கள் ஆசிரியர்களிடம், நான் இப்படித்தானே இத்தனை நாட்களாக வகுப்பிற்கு வருகிறேன். இவ்வளவு நாட்களாக பிரச்சனை இல்லையே. இப்போது என்ன திடீரென பிரச்சனை? என்னை உள்ளே விடுங்கள். இது இந்து மதத்தில் இருக்கும் நம்பிக்கை. இது காலம் காலமாக நாங்கள் பின்பற்றி வரும் முறை. இதை தடுக்க வேண்டாம் என்று கூறி வாதம் செய்துள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம், இல்லை உங்களை உள்ளே விட முடியாது.

வாக்கு வாதம்
இது மத அடையாளங்களில் ஒன்று. நீங்கள் குங்குமம், விபூதி அணிவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இப்படி நீங்கள் அணிந்து வர கூடாது என்று உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. மத அடையாளங்களோடு நீங்கள் வகுப்பிற்கு வர கூடாது. கோர்ட் இடைக்கால உத்தரவு அப்படித்தான் சொல்லி இருக்கிறது என்று வாதம் வைத்துள்ளனர். இதையடுத்து அந்த மாணவர் குங்குமத்தை அழித்துவிட்டு வகுப்பிற்கு சென்றார்.

பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான் குங்குமம் அணிந்துதான் வகுப்பிற்கு இத்தனை நாட்கள் வந்தேன். நாங்கள் அமைதியாக இருக்கிறோம். நாங்கள் இப்போது காவி ஷால் அணிந்து போராட்டம் செய்யவில்லை. மத ரீதியாக நாங்கள் மோதல் செய்யவில்லை. ஆனால் சாதாரண குங்குமம் வைத்ததற்கு அவர்கள் என்னை திருப்பி அனுப்புகிறார்கள். இது என் நம்பிக்கைக்கு, உரிமைக்கு எதிரானது என்று அந்த மாணவர் பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications