காய்ச்சல் மாத்திரையை போன் மீது வைத்து உடைக்க முடியாதாமே.. அமைச்சர் சரத்குமார் பதிலால் ஆர்கே சந்தேகம்
சென்னை: அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தன் குழந்தைக்கு காய்ச்சல் மாத்திரையை தான் அப்படி கொடுத்ததாக அவர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், குழந்தைக்கான காய்ச்சல் மாத்திரையை போன் மீது வைத்து உடைக்க முடியாதாமே என்று மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களிலும் இந்த விவகாரம் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
தவெக அரசின், தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் சரத்குமார். இவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவில், "கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியினை நேரில் பார்த்த சரத்குமார் பவுடர் ஒன்றை செல்போனில் வைத்து அதனை கிரெடிட் கார்டால் அங்கும் இங்குமாக உரசுவது போன்ற வீடியோ பரவியது."

மூத்த பத்திரிகையாளர் சந்தேகம்
இதில் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அமைச்சர் ஒருவரே போதைப் பொருள் பயன்படுத்தினால் எப்படி? என்றும், உடனே அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. சோஷியல் மீடியாக்களில் இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அமைச்சர் சரத்குமார் இது குறித்து விளக்கம் அளித்தார். அவர் தனது குழந்தைக்கு மாத்திரையை தான் அப்படி நசுக்கி கொடுத்ததாக கூறினார். ஆனால் அவரது விளக்கம் நம்பும்படியாக இல்லை என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
அந்த வகையில், மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன், செல்போனில் வைத்து காய்ச்சல் மாத்திரையை எப்படி உடைக்க முடியும் என்கிற ரீதியில் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
அமைச்சராக இருக்கும் ஒருவரே
நேற்று காலையில் தான் தமிழக முதல்வர் விஜய் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தி அதில் முழுமையாக கலந்துகொண்டார். அவரே ஓடி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆதவ் அர்ஜுனாவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா இந்தியாவிலேயே முதல் முறையாக முதல்வர் ஒருவர் மாரத்தான் போட்டியில் முழுவதுமாக ஓடியிருக்கிறார் என ஒரு பொய்யான தகவலை கூறினார். அதற்கு உடனடியாக பலரும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓடியிருக்கிறார் என பதில் கொடுத்தனர். இது எதோ சின்ன விஷயம் தான்.. இதை விடுங்க..
ஆனால், அன்றைய தினமே ஒரு வீடியோ ஒன்று வெளியாகிறது. அந்த வீடியோவில், தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரே போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ தான். ஐபிஎல் போட்டி நடந்துகொண்டிருக்கும் போது, செல்போனில் வெள்ளையாக ஒரு பவுடர் இருக்கிறது. அதனை கிரெடிட் கார்டினை வைத்து அங்கும் இங்குமாக தள்ளிக்கொண்டு இருக்கிறார். எதோ செய்துகொண்டிருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள்.
எப்படி மாத்திரையை உடைக்க முடியும்?
பொதுவாக போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள், மூக்கில் வைத்து இழுப்பதற்காக இப்படி செய்வார்கள். அமைச்சர் சரத்குமார் இதற்கான ஒத்திகை பார்த்தாரா என்று நமக்கு தெரியாது. அவர் விளக்கம் அளிக்கும் போது அது குழந்தைகளுக்கான மருந்து என்று சொல்கிறார். இதற்கு திமுக செய்தித் தொடர்பாளரும், மருத்துவமான ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர், குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்து என்றால், குரோசின், டோலோ போன்ற மருந்து தான். இந்த மருந்தினை ஒரு போனில் வைத்து தட்டி பவுடர் ஆக்குவது என்பது முடியாதது.
அவர் அடித்து அடித்து காண்பிக்கிறார்.. வாட்டர் பாட்டிலை கொண்டு அடித்து காண்பிக்கிறார்.. கையால் அடித்து காண்பிக்கிறார்.. ஆனால் எளிதில் உடையக் கூடிய மருந்து இல்லை. அப்படி பவுடர் ஆக்க முடியாது.. அதே நேரம் வீடியோ யாரால் எடுக்கப்பட்டது என்பதும் நமக்கு தெரியாது. இதனால் அமைச்சர் பதவியில் எப்படி அவரை வைக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. The Minister won't last (அமைச்சர் நீண்ட நாள் பதவியில் இருக்க மாட்டார்) என்றே எனக்கு தோன்றுகிறது. கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் பரவாயில்லை. ஆனால் தமிழகத்தில் இது பெரிய விஷயம்" என்று கூறினார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
அமைச்சர் சரத்குமார் கூறியது என்ன?
போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து விளக்கம் அளித்த தமிழக மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், "2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை குடும்பத்தினருடன் பார்த்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை தவறாக சித்தரித்து தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அப்போது உடல்நலக்குறைவால் மாத்திரையை விழுங்க முடியாமல் இருந்த தனது குழந்தைக்காக, அந்த மாத்திரையை பொடியாக நசுக்கி தண்ணீரில் கலந்து கொடுத்தோம்.
ஆனால், இதனை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி தவறான தகவல் பரப்பப்படுகிறது. அந்த இடத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட பலத்த பாதுகாப்பு இருந்த நிலையில் அத்தகைய செயல் நடைபெற வாய்ப்பே இல்லை. உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பாமல், சமூக வலைதளங்களில் தவறான வீடியோக்களை பகிர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியும் விளக்கம் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
