டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
பெங்களூர்: கர்நாடகாவின் புதிய முதல்வராக டிகே சிவக்குமார் கடந்த 3ம் தேதி பொறுப்பேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இந்நிலையில தான் பெங்களூர் பிடிஎம் லே-அவுட் தொகுதியின் எம்எல்ஏவும், சீனியர் காங்கிரஸ் தலைவருமான ராமலிங்க ரெட்டி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2023 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆண்டுகளாக சித்தராமையா முதல்வராக இருந்தார். கடந்த மாதம் 28 ம் தேதி சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். துணை முதல்வர் டிகே சிவக்குமார் அடுத்த முதல்வராக தேர்வானார்.
இதையடுத்து கடந்த 3ம் தேதி மாலை 4 மணியளவில் டிகே சிவக்குமார் கர்நாடகா முதல்வராக பதவியேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதில் பரமேஸ்வர் துணை முதல்வரானார். மற்ற 12 பேரும் அமைச்சர்களாக தொடர்ந்தனர்.
இதில் பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியில் வென்று எம்எல்ஏவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர் ராமலிங்க ரெட்டியும் அடங்குவார். இவர் அமைச்சராக பதவியேற்றார். நேற்றைய தினம் அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் ராமலிங்க ரெட்டிக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது.
இதனால் ராமலிங்க ரெட்டி கடும் அதிருப்தியடைந்தார். ஏனென்றால் ராமலிங்க ரெட்டிக்கு பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பதவி தருவதாக முதல்வர் டிகே சிவக்குமார் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் நேற்றைய தினம் ராமலிங்க ரெட்டிக்கு, பெங்களூர் நகர வளர்ச்சி துறைக்கு பதில் பெரிய மற்றும் சிறிய நீர்ப்பாசனத்துறை வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த ராமலிங்க ரெட்டி இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். வெறும் காங்கிரஸ் எம்எல்ஏவாக தொடருவதாக அறிவித்துள்ளார்.
இதுபற்றி ராமலிங் ரெட்டி இன்று கூறுகையில், ''நான் மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். இனி இதனை தாங்கி கொள்ள முடியும். என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும். நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும், தொண்டனாகவும் தொடர்வேன்.
நான் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளேன். முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, எஸ்எம் கிருஷ்ணா , சித்தராமையா அமைச்சரவையிடம் இருந்துள்ளேன். நான் கடந்த 53 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருக்கிறேன். எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஆனால் ஏமாற்றம் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
ராமலிங்க ரெட்டி கர்நாடகா காங்கிரஸில் மிக மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் கடந்த 1989, 1994, 1999 2004 என 4 சட்டசபை தேர்தல்களில் பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு பெங்களூர் பிடிஎம் லே-அவுட் சட்டசபை தொகுதியில் 2008, 2013, 208, 2023 என்று 4 முறை எம்எல்ஏவாகி உள்ளார். தொடர்ந்து 8 முறை காங்கிரஸ் சார்பில் வென்று வந்தவர் தான் ராமலிங்க ரெட்டி.
பெங்களூரில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ருவராக உள்ளார். இவர் 6 முறை அமைச்சர்களாக செல்பட்ட அனுபவம் கொண்டவர். கர்நாடகா போலீஸ் துறை, போக்குவரத்து துறை உள்பட பல துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். முந்தைய சித்தராமையா அமைச்சரவையிலும் போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார்.
பதவியேற்ற 2 நாளிலேயே ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது என்பது கர்நாடகா முதல்வராக பதவியேற்றுள்ள டிகே சிவக்குமாருக்கு விழுந்த முதல் அடியாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications