கட்டுக்கட்டாக பணம்.. அனாதையாக நின்ற காரை திறந்துமே போலீஸ் கண்ட காட்சி.. எத்தனை கோடி தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் வனப்பகுதியில் அனாதையாக நின்ற காரை திறந்து சோதனை செய்தபோது அதில் இருந்த இரும்பு பெட்டியில் கட்டுக்கட்டாக ரூ1.15 கோடி இருந்தது. இந்த பணம் யாருக்கு சொந்தமானது? என்ற விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராமனகுள்ளி என்ற இடம் உள்ளது. இது வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதன் அருகே தேசிய நெடுஞ்சாலை 63 செல்கிறது.

இந்த ராமனகுள்ளி பகுதியில் வெள்ளை நிறத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்ததது. காரின் போனட் மற்றும் டிரங் ஆகியவை திறந்த நிலையில் இருந்தது. இந்த கார் சில நாட்கள் அப்படியே நின்றது.
கடந்த 27 ம் தேதி முதல் இந்த கார் அனாதையாகவே நின்றது. கண்ணாடிகள் உடைந்து இருந்தன. இந்த கார் தொடர்ந்து அங்கேயே நின்றதால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று காரை சோதித்தனர். காரை திறந்து பார்த்தபோது இருக்கைகள் கிழிந்து இருந்தன.
காரின் உள்ளே இரும்பு பெட்டி ஒன்று இருந்தது. அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. அதில் மொத்தம் ரூ1.15 கோடி பணம் இருந்தது. இதையடுத்து பணத்தை கைபற்றிய போலீசார் காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது அந்த கார் குடகு மாவட்டம் மடிக்கேரி ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
ஆனால் காரின் பதிவெண் என்பது அல்ட்ராஸ் காருக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் என்பது ஹுண்டாய் கிரிட்டா ஆகும். இதனால் குழப்பம் என்பது நீடித்து வருகிறது. இதனால் சட்டவிரோத செயல்களுக்கு காரின் பதிவெண்ணை மாற்றி பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து ரூ.1.15 கோடி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அங்கோலா போலீஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். இதுதொடர்பாக அங்கோலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛காரின் உரிமையாளர் யார் என்பது பற்றியும், பணம் எப்படி காருக்குள் வந்தது என்பது பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இதுதொடர்பான தகவல்களை திரட்டி அதுபற்றிய விபரங்களை அளிக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications