காதை கிழித்த ஹாரன் சவுண்ட்.. டிரைவருக்கு போலீஸ் கொடுத்த தண்டனை! இனி வாழ்க்கையில் மறக்கவே மாட்டாங்க
பெங்களூர்: சாலைகளில் நாம் பயணம் செய்யும்போது பைக் முதல் லாரிகள் வரை சிலர் அதிக ஒலி எழுப்பும் ஹாரனை பொருத்தி நமது மனஅமைதியை கெடுப்பார்கள். அந்த வகையில் அதிக ஒலி எழுப்பும் ஹாரனை பொருத்தி வாகனம் ஓட்டிய டிரைவருக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டைனயை போக்குவரத்து போலீசார் வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஹாரன்.. முன்னால் செல்லும் வாகனங்களை முந்தும் போதும், சாலையில் வாகனம் வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் உள்ள கருவி தான் ஹாரன். ஆனால் இன்று பலரும் மற்றவர்களின் கவனத்தை பெற வேண்டும் என்பதற்காக அதிக ஒலி எழுப்பும் ஹாரனை பொருத்தி வருகின்றன.

இது ஒலி மாசுவை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இது குழந்தைகள், முதியவர்களின் செவித்திறனை பாதிக்கும். இதனால் குறைந்த ஒலி எழுப்பக்கூடிய ஹாரனை தான் மக்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் பயன்படுத்த வேண்டும். ஆனாலும் கூட பலரும் விதிகளை மீறி அதிக ஒலி தரும் ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இப்படி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு அவ்வப்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதோடு, அந்த ஹாரன்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் கூட ஒரு தரப்பினர் இன்னும் திருந்தவில்லை. இப்படி அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மறக்க முடியாத நூதன தண்டனையை வழங்கி உள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்துகிறார். வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதை கவனிக்கும் அவர் டிரைவர்களை வாகனத்தின் முன்பகுதியில் ஹாரன் சவுண்ட் வெளிவரும் இடத்தில் காதை வைக்கும்படி கூறி ஹாரன் அடிக்கிறார்.
அந்த சத்தம் கேட்டு டிரைவர்கள் காதை விலக்கி கொள்கிறார். இதையடுத்து அந்த போலீஸ்காரர், டிரைவர்களிடம், ‛‛இந்த ஹாரன் தொந்தரவை தருகிறதா? உங்களுக்கு தொந்தரவு ஏற்படுவதை போல் தான் பொதுமக்களுக்கும் தொந்தரவு ஏற்படுகிறது'' என்று பாடம் எடுக்கிறார். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது.
இந்த வீடியோவில் இருக்கும் வாகனத்தில் கன்னட மொழியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. பதிவெண் கேஏ என்று உள்ளது. அதோடு போலீஸ்காரர், டிரைவர் இடையே நடக்கும் உரையாடல் கன்னட மொழியில் உள்ளது. இதனால் இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி பலரும் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி ஒருவர், ‛‛அருமையான பாடம். அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் பாதிக்கப்படும் மக்களின் நிலையை டிரைவர்களுக்கு உணர்த்திய போலீஸ்காருக்கு வாழ்த்துகள். இதுபோன்று நாடு முழுவதும் செய்ய வேண்டும்'' என்று கூறியுள்ளார். இன்னொரு நபர்,‛‛நல்ல ட்ரிட்மெண்ட். நான் கர்நாடகா போக்குவரத்து போலீஸ்காரரை பாராட்டுகிறேன். இதுபோன்ற நடவடிக்கையை தமிழ்நாட்டு போக்குவரத்து போலீஸ்காரரும் கையில் எடுக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications