"ஏங்க இது நம்ம வீடு இல்லை.." ஏம்மா அது உன் புருஷனே இல்லை.. பெட்ரோல் பங்கில் நடந்த காமெடி களோபரம்!
பெட்ரோல் பங்கில் கர்நாடக ஜோடிகள் செய்த சம்பவம் காமெடியில் முடிந்துள்ளது.
பெங்களூர்: கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ரானேபென்னூர் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வந்த இரண்டு ஜோடிகளால் பெரிய காமெடி சம்பவமே அரங்கேறியுள்ளது.
மொபைலை பார்த்துக் கொண்டே நடப்பது, சாப்பிடுவது, அவ்வளவு ஏன் வாகனம் ஓட்டுவது கூட மொபைலை பார்த்துக் கொண்டே செய்யும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் மொபைலுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
நமது வீடுகளில் இருக்கும் பெரியவர்கள் இப்படி 24*7 மொபைலை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் திட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். அவர்கள் எதற்காகத் திட்டுகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல் நாம் பதிலுக்கு அவர்களைத் திட்டியிருப்போம்.

மொபைல்
இந்த நவீன காலத்தில் நாம் அனைவரும் பெரும்பாலான நேரங்களில் மொபைலில் மூழ்கியுள்ளோம். தினசரி பெரும்பாலான நேரத்தை நாம் மொபைலில் தான் கழிக்கிறோம்.. வெளியே செல்லும் போது மொபைலை மறந்து கிளம்பினால்.. அன்று வீடு திரும்பும் வரை அனைவருக்கும் ஒருவித படபடப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். வெளியே சென்றிருக்கும் போது, மொபைலை பார்த்துக் கொண்டே பஸ் மாறி ஏறுவது, எங்கேயாவது இடித்துக் கொள்வது போன்ற சம்பவங்களையும் நாம் நிச்சயம் ஒரு முறையாவது செய்திருப்போம்.

கர்நாடகா
ஒரு நேரத்தில் நம்மால் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்பதால்.. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க முடியாது.. கர்நாடகாவில் ஒருவர் அலைப்பேசியைப் பயன்படுத்தாமலேயே ஒரு காமெடி தவறை செய்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ரானேபென்னூர் பெட்ரோல் பங்க்கில் தான் இந்த காமெடி நடந்துள்ளது. அங்கு இரண்டு ஜோடிகள் பெட்ரோல் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

பெட்ரோல் போட வந்த ஜோடிகள்
இரண்டு ஜோடிகளும் ஒரே நேரத்தில் வந்திருக்கிறார்கள்.. அவ்வளவு தான்.. இரண்டிலும் அவர்களின் கணவர்கள்தான் வண்டி ஓட்டியுள்ளனர். பெட்ரோல் நிரப்பக் கணவர் காத்திருக்க, மனைவிகள் அருகே காத்திருந்துள்ளனர். அதில் ஒரு கணவர் பெட்ரோல் நிரப்பி வந்தவுடன், "ஏறும்மா" என்று சொல்ல.. அவரும் ஏறிவிட்டார். இருவரும் அப்படியே பயணித்துள்ளனர். சத்தம் அதிகம் இருந்ததால் வண்டியை ஓட்டிய கணவர் பேசியது எதுவும் பெண் காதில் விழவில்லை.

உங்க கணவரே இல்லை
அவர்கள் வீடு அருகிலேயே இருந்துள்ளது.. வீட்டிற்கு வந்தவுடன் அந்த பெண் ஷாக் ஆகிவிட்டார். வண்டி நின்றவுடன், "ஏன் இங்க நிறுத்தி இருக்கீங்கள்.. இது நம்ம வீடு இல்லையே" என்று சொல்ல.. கணவருக்குப் பெரிய குழப்பம் இது நம்ம வீடு தானே என்று குழம்பியுள்ளார். அப்போது திரும்பிப் பார்த்த போது தான் அதிர்ந்து போய்விட்டார். அப்போது தான் அந்த பெண்ணும் உணர்ந்துள்ளார் அது தனது கணவரே இல்லை என்று...

குழப்பம்
தனது கணவர் அணிந்த வந்த ஹெல்மெட்டும் இந்த நபர் அணிந்து வந்த ஹெல்மெட்டும் ஒரு போல இருந்ததால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பதறியடித்து கொண்டு அவர்கள் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரும் இவரது மனைவியும் காத்திருந்துள்ளனர். இதையடுத்து இருவரும் இந்த முறை மிஸ்டெக் இல்லாமல் அவரவர் துணையுடன் கிளம்பி சென்றுள்ளனர்.

சிரிப்பலை
நான்கு பேரும் ஹெல்மெட் அணிந்து கொண்டிருந்ததால் இது குழப்பம் நடந்துள்ளது. மேலும், இரு பெண்களுமே ஒரு மாதிரியான புடவையை அணிந்துள்ளனர். கணவர் குழம்பிப் போக இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதாம். நான்கு பேரில் யாருமே கவனிக்கவில்லை என்பதாலேயே இந்த காமெடி அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் அங்குப் பெரிய சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications